Warner Wicket: வலது கையில் பேட்டிங்.. சோக்கு காட்டிய வார்னர்.. சோலியை முடித்து விட்ட அஸ்வின்!
Warner Wicket: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் வலது கையில் பேட் செய்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Warner Wicket: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது. 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் சேர்த்தது.
400 ரன்கள்:
அதன்படி, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலககுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றினார்.
அதன் பின்னர் நிதானமாக ஆடி வந்த ஆஸ்திரேலிய அணி கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தது. குறிப்பாக வார்னர் விக்கெட் விழுந்ததைப் பற்றி கவலைப்படாமல் ஆடிக்கொண்டு இருந்தார். ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது.
Ashwin - The GOAT is back.pic.twitter.com/yOiDAT2266
— Johns. (@CricCrazyJohns) September 24, 2023
317 ரன்கள்:
இதனால் போட்டி தடைபட்டதால் போட்டி ஓவரும் வெற்றி இலக்கும் குறைக்கப்பட்டது. அதாவது 33 ஓவர்களில் 317 ரன்கள் சேர்த்தால் வெற்றி என மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி 13வது ஓவருக்கு முன்னதாக வார்னர் தனது கை உறைகளை மாற்றிக்கொண்டார். இதனால் இடதுபுறம் பேட்டிங் பிடிக்கும் வார்னர் வலதுகையில் பேட்டிங் பிடித்தார். இந்த ஓவரை வீசிய அஸ்வினுக்கு சிரிப்பாக இருந்தாலும், அவரும் சவால் அளிக்கும் வகையில் பந்து வீசினார். அந்த ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு சிங்கிள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார்.
அதன் பின்னர் அதேபோல் அஸ்வின் வீசிய 15வது ஓவரிலும் வலதுகையில் பேட்டிங் பிடித்த வார்னர், அஸ்வின் பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தில் வார்னரை எல்.பி.டபள்யூ முறையில் அவுட் செய்தார்.
அதன் பின்னர் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டினை ஜடேஜா கைப்பற்றினார். அதிரடி ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் விக்கெட்டினை ரன் அவுட் முறையில் இஷான் கிஷன் கைப்பற்றினார்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 140 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. அந்த நிலையில் கைகோர்த்த அபோட் மற்றும் ஹோசல்வுட் கூட்டணி சிறப்பாக ரன்கள் குவித்தது. இவர்கள் இருவரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 44 பந்தில் 77 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 28.2ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.