(Source: ECI | ABP NEWS)
Adelaide: நாளை நடக்குது 2வது போட்டி.. அடிலெய்ட் மைதானம் எப்படி? அசத்துமா இந்தியா?
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலிய அணி மோதும் அடிலெய்ட் மைதானத்தில் நிலவரம் என்ன? என்பதை கீழே காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. கேப்டன்சியை ரோகித்சர்மாவிடம் இருந்து பறித்து சுப்மன்கில்லிடம் வழங்கியது, விராட் கோலி - ரோகித் சர்மா மீண்டும் அணியில் இடம்பிடித்தது என இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அடிலெய்டில் அடுத்த மோதல்:
இந்த சூழலில், பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ரோகித்சர்மா, விராட் கோலி சொற்ப ரன்களில் அவுட்டானது மற்றும் மழை காரணமாக இந்த போட்டி இந்திய அணிக்கு சிக்கலாகவே இருந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது. இந்திய அணிக்கும் அடிலெய்ட் மைதானத்திற்கும் நல்ல ராசியான மைதானம் ஆகும்.
அடிலெய்டில் எப்படி?
அடிலெய்ட் மைதானம் பற்றி கீழே காணலாம்.
ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான மைதானம் அடிலெய்ட் மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் 53 ஆயிரத்து 583 பேர் வரை அமர்ந்து போட்டியை ரசித்துப் பார்க்க முடியும்.
இந்த போட்டியில் இதுவரை 94 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட் செய்த அணி 49 ஒருநாள் போட்டிகளிலும், 2வது பேட் செய்த அணி 43 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்யும் அணியின் சராசரி ஸ்கோர் 225 ரன்கள் ஆகும். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்யும் அணியின் சராசரி ஸ்கோர் 197 ரன்கள் ஆகும்.
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2017ம் ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும். ஒருநாள் போட்டியில் குறைந்தபட்சமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 70 ரன்களில் சுருண்டுள்ளது.
இந்த மைதானத்தில் அதிகபட்ச சேசிங்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 303 ரன்களை சேஸ் செய்துள்ளது. குறைந்த பட்ச ரன்களை வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற அணியாக பாகிஸ்தான் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 140 ரன்களை எட்ட விடாமல் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு ராசி:
இந்த மைதானம் இந்திய அணிக்கு மிகவும் சாதகமான மைதானம் ஆகும். 2008ம் ஆண்டில் இருந்து இந்திய அணியை அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது இல்லை என்ற வரலாறு உள்ளது. இதை இந்திய அணி தக்கவைக்குமா? என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் சூழலை தக்க வைக்க இயலும். இல்லாவிட்டால் 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துவிடும். அடிலெய்டில் வானிலை நன்றாக இருப்பதால் போட்டி எந்த தடையும் இன்றி நடக்கும் என்று கருதப்படுகிறது.




















