IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடந்தது. விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய நிலையில் நடந்த போட்டி என்பதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
26 ஓவர்கள் ஆட்டம்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மழையின் தாக்கம் இருந்ததால் அவர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்த ரோகித் 8 ரன்களிலும் விராட் கோலி டக் அவுட்டும் ஆன நிலையில், மழையும் குறுக்கிட ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
131 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், நிதிஷ்ரெட்டியின் பேட்டிங்கால் இந்திய அணி 26 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு 131 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ் - ட்ராவிஸ் ஹெட் ஜோடி ஆட்டத்தை தொடங்கினர்.
மிட்செல் மார்ஷ் அசத்தல்:
இந்திய அணியும் பந்துவீச்சுத் தாக்குதல் நடத்த தயாரானது. ட்ராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய நிலையில் அர்ஷ்தீப் சிங் வேகத்தில் 8 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஷார்ட் 8 ரன்களில் அவுட்டானார். அதன்பின்பு, கேப்டன் மார்ஷ் - விக்கெட் கீப்பர் பிலிப் ஜோடி சேர்ந்தனர். கேப்டன் மார்ஷ் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாச ஆட்டம் ஆஸ்திரேலியா கட்டுப்பாட்டிற்குள்ளே இருந்தது.

முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஓரளவு கட்டுக்கோப்பாக வீசினாலும் ராணா பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் விளாசினர். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசிய நிலையில் 99 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. சிறப்பாக ஆடிய பிலிப் 29 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்களுக்கு அவுட்டானது.
எளிதான வெற்றி:
இதையடுத்து, கேப்டன் மார்ஷ் - ரென்ஷா ஜோடி சேர்ந்தனர். இலக்கை நெருங்கியதால் இவர்கள் வெற்றி பெறுவதில் எந்த சிரமும் இல்லை. கேப்டன் மார்ஷ் பொறுப்புடன் ஆடி வெற்றி பெற வைத்தார். 21.1 ஓவர்களில் 131 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் மார்ஷ் கடைசி வரை அவுட்டாகாமல் 52 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்தார். ரென்ஷா 24 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணிக்கு தொடக்கத்திலே 2 விக்கெட்டுகள் விழுந்தது, 16 ஓவர்களில் 54 ரன்களுடன் இருந்த இந்திய அணிக்கு மழை குறுக்கிட்டதால் 26 ஓவர்களாக ஆட்டத்தை குறைத்தது, கடைசி 10 ஓவர்களில் அதிரடி காட்ட முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தது என இந்திய அணிக்கு இந்த போட்டியில் ஏராளமான சவால் இருந்தது.
ரன்களை வழங்கிய ராணா:
இந்திய அணிக்காக சிராஜ் 4 ஓவர்களில் 1 ஓவர் மெய்டனாக வீசி 21 ரன்களை வழங்கினார். அர்ஷ்தீப்சிங் 5 ஓவர்களில் 1 விக்கெட்டை கைப்பற்றி 31 ரன்களையும், ஹர்ஷித் ராணா 27 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். அக்ஷர் படேல் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.




















