IND vs AUS: 26 ஓவர்கள்தான்... 137 ரன்களை எடுக்குமா ஆஸ்திரேலியா? பவுலிங்கில் கலக்குமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலியா அணி மோதும் முதல் போட்டி மழை காரணமாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த்தில் நடந்து வருகிறது. ரோகித் சர்மா - விராட் கோலி ஆகிய இரு பெரும் ஜாம்பவான்கள் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது.
விட்டு விட்டுப் பெய்த மழை:
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி டக் அவுட்டானார். அடுத்து சில நிமிடங்களில் கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களில் அவுட்டானார்.
25 ரன்களுக்கு 3 விக்கெட் விழுந்தபோது மழை குறுக்கே வந்தது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணிக்காக மீண்டும் ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஷர் படேல் ஜோடி களமிறங்கியது. மழை ஒரு பக்கம் பெய்தாலும், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகிய இருவரும் பந்துவீச்சில் அசத்தி வந்தனர்.

நிதானம் காட்டி வந்த அக்ஷர் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களில் அவுட்டாக, 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. கே.எல்.ராகுல் - அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்த நிலையில், இருவரும் நிதானமாக ஆடினர். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. 16 ஓவர்களில் 54 ரன்களில் இந்திய அணி ஆடிக்கொண்டிருந்தபோது மீண்டும் மழை பெய்தது.
26 ஓவர்களாக குறைந்த ஆட்டம்:
இதையடுத்து, 26 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால், இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. இதையடுத்து, அக்ஷர் படேல் - கே.எல்.ராகுல் ஜோடி ஆடி வருகிறது. இந்திய அணி அதிரடியாக ஆடி 120 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதிரடியாக ஆடத் தொடங்கிய அக்ஷர் படேல் 38 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
இந்திய அணி பெரியளவு இலக்கு நிர்ணயிக்காவிட்டால் ஆஸஅதிரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சவால் அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்திய அணியில் முகமது சிராஜ், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல் ஆகியோர் உள்ளனர். வாஷிங்டன் சுந்தரும் 10 ரன்களுக்கு அவுட்டாக, மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கே.எல்.ராகுல் 31 ஓவர்களில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி கடைசியில் 26 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட்டைப் பறிகொடுத்தது. நிதிஷ் ரெட்டி அவுட்டாகாமல் 11 பந்துகளில் 2 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்தார்.
அசத்துமா இந்திய பவுலிங்:
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தமட்டில் மிட்செல் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட் ஆகியோர் மட்டுமே அனுபவ பேட்ஸ்மேன்கள். மற்ற வீரர்கள் இளம் வீரர்கள் ஆவார்கள். இதனால், இந்திய அணி பந்துவீச்சில் அசத்தினால் மட்டுமே இந்த போட்டியை தங்கள் வசப்படுத்த முடியும்.
அதேசமயம் இந்த போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. அவ்வாறு குறுக்கிட்டால் டக்வொர்த் லீவீஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. முற்றிலும் இளம் வீரர்கள் இரு அணியிலும் அதிகளவு வீரர்கள் உள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் யார் ஆதிக்கம் செலுத்த உள்ளனர்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டானது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




















