
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்குகின்றது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் முடிந்த அடுத்த வாரத்தில் ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை டி20 உலகக் கோப்பையை அமெரிக்காவும் வெஸ்ட் இண்டீஸும் இணைந்து நடத்துகின்றது. மொத்தம் 20 அணிகள் இம்முறை களமிறங்குவதால் டி20 உலகக்கோப்பை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
களமிறங்கவுள்ள 20 அணிகள் மொத்தம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் தலா ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளது. இதில் குரூப் பி-இல் இடம் பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணிக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரசு பால் நிறுவனமான நந்தினி அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக மாறியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்பான்சர்ஷிப் என்பது உலகக் கோப்பைக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Cricket Scotland and Karnataka Milk Federation are pleased to announce Nandini as the official sponsor of the Scotland men’s team at the ICC Men’s T20 World Cup 2024 🤝🌎🏴#FollowScotland
— Cricket Scotland (@CricketScotland) May 15, 2024
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் வர்த்தக மேலாளர் Claire Drummond இது தொடர்பாக கூறுகையில், "எங்கள் ஆண்கள் அணி உலக அரங்கில் முன்னேறி, உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராகப் போட்டியிடும் போது, ஒரு நிறுவப்பட்ட பிராண்ட் அவர்களுக்கு ஆதரவளிப்பது அற்புதமானது. இதனை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்கின்றோம்” என்றார்.
நந்தினியின் தாய் நிறுவனமான கர்நாடகா பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் எம்.கே.ஜெகதீஷ் கூறுகையில், "இந்த உலகக் கோப்பையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்துடனான எங்கள் கூட்டாண்மை கிரிக்கெட் ரசிகர்களின் உலகளாவிய பார்வையாளர்களை அடைய நந்தினி உதவும், மேலும் எங்களது நந்தினி பிராண்டை பல சர்வதேச நாடுகளுக்கு கொண்டு செல்ல இது சரியான வழியாக இருக்கும் என நம்புகின்றோம்” என தெரிவித்தார்.
ஸ்காட்லாந்து அணி நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூன் 4ஆம் தேதி விளையாடவுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

