ICC T-20 World cup: ஸ்டார்க் யார்க்கர்...‛வாவ்’ வார்னர்... ஜம்பா ‛ஜிம்பா’.... ஆஸி., ஆசம்!
டேவிட் வார்னர் கம்-பேக், மிட்சல் ஸ்டார்க்கின் தெறி பெளலிங், ஒட்டுமொத்த அணி பங்களிப்பு என ஆஸ்திரேலியா அணி நேற்று அதிரடி காட்டியது. நேற்றைய போட்டியின் ஹைலைட்ஸ் இதோ!
2021 டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. க்ரூப்:1-ல் இடம் பிடித்திருக்கும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் துபாய் மைதானத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி. டேவிட் வார்னர் கம்-பேக், மிட்சல் ஸ்டார்க்கின் தெறி பெளலிங், ஒட்டுமொத்த அணி பங்களிப்பு என ஆஸ்திரேலியா அணி நேற்று அதிரடி காட்டியது. நேற்றைய போட்டியின் ஹைலைட்ஸ் இதோ!
மிட்சல் ஸ்டார்க்கின் அசத்தல் பந்துவீச்சு
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் களமிறங்கிய இலங்கை பேட்டர்கள், நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், ஆஸ்திரேலிய பெளலர்களின் சிறப்பான பந்துவீச்சால் அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தனர். எனினும், சமாளித்து ரன் சேர்த்தனர். ஓப்பனராக களமிறங்கிய சிறப்பாக விளையாடி கொண்டிருந்த குசல் பெராராவின் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்புயல் மிட்சல் ஸ்டார்க். 144 KPH வேகத்தில் அவர் வீசிய யார்க்கர் பந்து, கேப்பில் சென்று ஸ்டம்ப்ஸ்களை பதம் பார்த்தது. இந்த விக்கெட் முதல் இன்னிங்ஸின் திருப்புமுனை மொமண்ட்டாக இருந்தது.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. பனுகா ராஜபக்ஷே 26 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 33 ரன்களுடனும், கருணரத்னே 6 பந்தில் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் ஆடம் ஜம்பா
முதல் இன்னிங்ஸில் 4 ஓவர்கள் வீசிய ஜம்பா, வெறும் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜம்பாவின் இந்த எகானமி பந்துவீச்சால் இலங்கையின் ஸ்கோர் உயராமல் இருந்தது. ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் எடுத்த இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
டேவிட் வார்னர் கம் - பேக்
இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, வார்னர் - ஃபின்ச் இணை வலிமையான ஓப்பனிங் தந்தது. 10 பவுண்டரிகளை விளாசிய வார்னர், 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் தனது 19வது அரை சதத்தை நிறைவு செய்தார் வார்னர். ஃபின்ச் 27 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் சேஸிங் எளிதானது. 17 ஓவர்கள் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, சூப்பர் 12 சுற்று போட்டிகளில் தென்னாப்ரிக்கா, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளது.
இந்த சுற்றில் இருந்து டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற இருப்பதால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. அடுத்து நாளை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. தென்னாப்ரிக்காவை இலங்கை எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்