ICC Rankings 2022: பறந்த ஸ்டெம்புக்கு கிடைத்த பரிசு... ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த பும்ரா..!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட்டை பின்னுக்குத் தள்ளி பும்ரா தற்போது மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நேற்று இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஐசிசியின் ஒருநாள் ஆண்கள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட்டை பின்னுக்குத் தள்ளி, பும்ரா தற்போது மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ரா, ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் பும்ரா ஒருநாள் தொடரில் 6/19 என்ற தனது வாழ்க்கைச் சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்தார்.
No bowler above him 🔝
— ICC (@ICC) July 13, 2022
Jasprit Bumrah stands as the No.1 ODI bowler in the latest @MRFWorldwide rankings!
பும்ரா ஐசிசி டி20 தரவரிசையில் சில காலமாக முதலிடத்தில் இருந்த பந்துவீச்சாளராக இருந்தார். மேலும் அவர் சமீபத்தில் ஐசிசியின் பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
மற்றொரு சுவாரஸ்யமான புள்ளிவிவரம் என்னவென்றால், ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் உச்சத்தை எட்டிய ரீசெண்ட் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே. இதற்கு முன்னதாக கபில் தேவ் முதல் மற்றும் ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றிருந்தார். தற்போது அதை பும்ரா சமன் செய்துள்ளார். இந்திய அணியின் சக சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, அனில் கும்ப்ளே மற்றும் மனிந்தர் சிங் ஆகியோரும் ஐசிசியின் பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
ஐசிசி சர்வதேச ஒருநாள் அணி தரவரிசை :
ஐசிசி சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 108 புள்ளிகள் பெற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 127 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 106 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடையும் பட்சத்தில் பாகிஸ்தான் மீண்டும் 3வது இடத்தை பெற்றுவிடும். ஆகவே இந்திய அணி அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் தரவரிசையில் தொடர்ந்து 3வது இடத்தை பிடிக்க முடியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்