PAKvsNED: பாகிஸ்தானை பயமுறுத்திய விக்ரம்.. யார் இந்த 20 வயது பாலகன்?
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் தொடக்க வீரரான இந்தியாவில் பிறந்த விக்ரம்சிங் அபாரமாக ஆடினார்.
பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செயது 286 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 68 ரன்களையும், சௌத் ஷகீல் 68 ரன்களையும் விளாசினார். முகமது நவாஸ் 39 ரன்களும், ஷதாப்கான் 32 ரன்களும் அடித்தனர்.
விக்ரம்சிங் அபாரம்:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு தொடக்க வீரர் மேக்ஸ் ஓ டவுட் 5 ரன்களில் அவுட்டானார். அவர் 5 ரன்களில் அவுட்டான பிறகு வந்த அக்கர்மன் 17 ரன்களில் அவுட்டானர். பின்னர் ஜோடி சேர்ந்த விக்ரம் – பாஸ் டீ லீட் ஜோடி சிறப்பாக ஆடியது.
இவர்கள் ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்றே கூறலாம். 50 ரன்களில் ஜோடி சேர்ந்த இந்த கூட்டணி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி பாகிஸ்தான் பந்துவீச்சை அச்சுறுத்தியது. 120 ரன்கள் சேர்த்தபோது இருவரும் பிரிந்தனர்.
சிறப்பாக ஆடிய விக்ரம் சிங் ஷதாப்கான் சுழலில் அரைசதம் விளாசிய நிலையில் அவுட்டானார். அவர் 67 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரி 1 சிக்ஸர் அடங்கும். நெதர்லாந்து அணிக்காக சிறப்பாக ஆடிய விக்ரம் சிங் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். இந்தியாவில் பிறந்தாலும் இவர் வளர்ந்தது நெதர்லாந்தில் ஆகும்.
யார் இந்த விக்ரம்?
இவர் 2003ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி பிறந்தவர். பஞ்சாப்பில் உள்ள சீம குர்துவில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். சீக்கிய கலவரத்தில் இவரது தாத்தா 1984ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுவிட்டார். இவரது தாத்தா தொடக்கத்தில் அங்கு டாக்சி ஓட்டுனராக இருந்துள்ளார். பின்னர். சொந்தமாக போக்குவரத்து நிறுவனத்தை ஆம்ஸ்டெல்வீனில் தொடங்கியுள்ளார்.
பின்னர், நெதர்லாந்துக்கும் இந்தியாவிற்கும் அவர் வந்து சென்ற நிலையில், விக்ரம்சிங்கிற்கு 7 வயது இருக்கும்போது நெதர்லாந்திற்கு மொத்தமாக குடியேறியுள்ளனர். விக்ரம்சிங் தன்னுடைய 11 வயது முதல் அந்த நாட்டில் உள்ள கிளப் போட்டியில் ஆடி வந்துள்ளார். பின்னர், நெதர்லாந்து அணிக்காக தன்னுடைய 15 வயதிலே அறிமுகம் ஆகியுள்ளார். நெதர்லாந்து அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணி, 2019ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோர் ஐரோப்பிய தகுதிச்சுற்றுகளில் ஆடியுள்ளார். அந்த தொடரில் அதிகபட்ச ரன் குவித்த 2வது வீரராக வந்தார்.
சர்வதேச போட்டியில் கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.
சிறு வயது முதலே கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் அவர் நெதர்லாந்து அணியில் தனது திறமை மூலம் சேர்ந்தார். விக்ரம்சிங் களத்தில் இருந்த வரை ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருந்ததே என்றே கூறலாம். ஏனெனில் அந்தளவு விக்ரம்ஜித்சிங் – லீட் ஜோடி சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து மிக நேர்த்தியாக ஆடினர்.
20 வயது:
20 வயதே ஆன விக்ரம்சிங் இதுவரை 25 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் 4 அரைசதங்களை நெதர்லாந்து அணிக்காக விளாசியுள்ளார். 8 டி20 போட்டிகளில் ஆடி 76 ரன்களையும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இனி வரும் ஆட்டங்களிலும் விக்ரம்சிங் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
விக்ரம்சிங் ஆட்டமிழந்த பிறகு நெதர்லாந்து அணியின் லீட் மட்டும் போராடினார். ஆனால், அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளிக்க யாரும் இல்லாததால் அவரும் 67 ரன்களில் அவுட்டானார். கடைசியில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நெதர்லாந்து.