ICC Men's Player of the Month award: அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்...!
அக்டோபர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.
அக்டோபர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் 2 பிரிவில் இடம்பெற்ற இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை தவிர எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தது.
அனைத்து ஆட்டங்களிலும் கோலி சிறப்பாக விளையாடினார். பெரும்பாலான ஆட்டங்களில் அரை சதம் விளாசினார். இந்நிலையில், கடந்த மாதத்துக்கான சிறந்த வீரராக அவரை தேர்வு செய்து ஐசிசி கெளரவித்துள்ளது.
முன்னதாக, டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றின் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி இந்தப் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
இந்தப் போட்டியில் 64 ரன்கள் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் முறியடித்தார். அதாவது ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இவர் சச்சின் டெண்டுல்கர் அடித்து இருந்த 3300 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் 3350 ரன்கள் விளாசியுள்ளார். 84 இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 3300 ரன்களை விராட் கோலி தாண்டினார்.
அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி வென்றார். அதாவது ஐசிசி தொடர் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்தியர் என்ற சாதனையை கோலி, சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் ஐசிசி தொடர் போட்டிகளில் 10 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.
குரூப் 2 பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்களை குவித்தார். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் மட்டும் விராட் கோலி, சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
A batting stalwart wins the ICC Men's Player of the Month award for October after some sensational performances 🌟
— ICC (@ICC) November 7, 2022
Find out who he is 👇
ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை டி20 தொடரில் கோலியின் செயல்பாடு மெச்சும் வகையில் இருந்தது. அதற்கான சரியான வெகுமதியை ஐசிசி வழங்கி கெளரவித்துள்ளது.