T20 World Cup 2024: ஓய்விற்கு பிறகு புது அவதாரம்..உலகக் கோப்பையில் களம் இறங்கும் டிகே!
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கை ஐசிசி எலைட் கமெண்ட்ரி பேனலில் ஒருவராக அறிவித்திருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த சீசனுடன் ஓய்வு பெற்றுக்கொண்டார்.
ஐபிஎல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் குவாலிபியர் 2ல் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி கொல்கத்தா அணியுடன் மே 26 ஆம் தேதி விளையாடும்.
முன்னதாக இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ப்ளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளே ஆப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவந்த தினேஷ் கார்த்திக்கும் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பெங்களூரு அணிரசிகர்களு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதேநேரம் இந்த சீசனின் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பையில் சேர்க்க வேண்டும் என்று கூட ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
உலகக் கோப்பையில் களம் இறங்கும் டிகே:
இந்நிலையில் தான் ஓய்வு பெற்றுவிட்ட தினேஷ் கார்த்திக்கை ஐசிசி எலைட் கமெண்ட்ரி பேனலில் ஒருவராக அறிவித்திருக்கிறது. எனவே அவர் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் கிரிக்கெட் வர்ணனையாளராக எலைட் பிரிவில் இடம் பெற்று செல்ல இருக்கிறார். ஏற்கனவே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரின் போது சிறப்பான முறையில் கமெண்டரியில் ஈடுபட்டு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்திருக்க முடியவில்லை:
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” இந்த டி20 உலகக்கோப்பை தொடர் பல வழிகளில் உற்சாகமான ஒன்றாக இருக்கும். 20 அணிகள் மற்றும் 55 போட்டிகள், மேலும் சில புதிய மைதானங்கள்என இது ஒரு பரபரப்பான கலவையாக அமைந்திருக்கிறது.
சிறந்த வர்ணனை குழுவில் ஒரு நபராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உடன் விளையாடிய வீரர்கள் குறித்து நான் பேச இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. என்னால் இதற்காக தற்பொழுது காத்துக் கொண்டிருக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.