T20 WC 2024: டி20 உலகக்கோப்பை அரையிறுதி நடக்கும் இடங்கள் திடீர் மாற்றம்! என்ன காரணம்?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் நடக்கும் மைதானங்கள் மாற்றப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
2024ம் ஆண்டு நடக்கும் கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுவது டி20 உலகக்கோப்பைத் திருவிழா ஆகும். இந்த திருவிழா வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 29ம் தேதி வரை நடக்கிறது.
டி20 உலகக்கோப்பையில் முக்கிய மாற்றம்:
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணையில் முக்கிய மாற்றத்தை ஐ.சி.சி, செய்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டி வெஸ்ட் இண்டீஸ் கயானாவில் உள்ள ப்ரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் அரையிறுதி போட்டி ஜூன் 27ம் தேதி நடைபெறுகிறது. ரிசர்வ் டே ஜூன் 28ம் தேதி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இரண்டாவது அரையிறுதி போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டிரினிடாட் மற்றும் டொபாகோவில் முதல் அரையிறுதி நடக்கிறது. அங்குள்ள ப்ரைன் லாரா கிரிக்கெட் அகாடமியில் ஜூன் 26ம் தேதி நடக்கிறது. அந்த போட்டிக்கான ரிசர்வ் டே ஜூன் 27ம் தேதி ஆகும்.
காரணம் என்ன?
இந்த மாற்றமானது இறுதிப்போட்டி நடக்கும் பார்படாஸிற்கு, அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் செல்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஏற்கனவே 2வது அரையிறுதி போட்டி அறிவிக்கப்பட்டு இருந்த டிரினிடாட் டொபாகோவில் இருந்து பார்படாஸ் மிகவும் தூரம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய போட்டிகளுக்கான நேரம் என்ன?
அதேபோல, ஐ.சி.சி. இறுதிப்போட்டி தவிர மற்றபோட்டிகள் தொடங்கும் நேரத்தையும் அறிவித்துள்ளது. இந்திய அணி ஆடும் குரூப் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி பார்படாஸில் உள்ள ப்ரிட்ஜ்டவுனின் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க் நகரத்தில் உள்ள நாசவ் கவுண்டி மைதானத்தில் ஆடுகிறது. இந்திய அணி ஆடும் குரூப் ஆட்டங்கள் அனைத்தும் நியூயார்க் நகரத்தில் நடக்கிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலி இருவரும் விளையாடும் கடைசி கிரிக்கெட் உலகக்கோப்பையாக இந்த டி20 உலகக்கோப்பை இருக்கும் என்பதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.