Highest Tax Payer: "660000000" இந்தியாவிலே அதிக வரி கட்டும் கிரிக்கெட் வீரர்! தோனி, ரோகித்துக்கு என்ன இடம்?
Highest Tax Payer Cricketer in India: இந்தியாவிலே அதிக வரி செலுத்தும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்வது கிரிக்கெட். எத்தனையோ நாடுகள் கிரிக்கெட் ஆடினாலும் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டி வருகிறது. குறிப்பாக, ஐ.சி.சி.க்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பாலான பங்கைத் தருவதும் இந்தியாவே ஆகும்.
முதலிடத்தில் விராட் கோலி:
இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக திகழும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வீரர்கள் அடையும் புகழும், பணமும் மிக மிக அதிகம் ஆகும். விளையாடுவது மட்டுமின்றி விளம்பரங்களில் நடிப்பது, விளம்பர தூதராக செயல்படுவது உள்ளிட்ட பலவற்றின் மூலமாக வருவாயை ஈட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், 2024ம் ஆண்டிற்கான நிதியாண்டில் அதிகளவு வரி செலுத்திய கிரிக்கெட் உள்பட விளையாட்டு வீரர்கள் யார்? யார்? என்பதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 66 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். மொத்த பட்டியலில் விராட் கோலி 5வது பிரபலமாக திகழ்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் ஆடி வருகிறார். அவர் கடந்த நிதியாண்டில் ரூபாய் 38 கோடி வரி செலுத்தியுள்ளார்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர் மொத்தமாக கடந்த நிதியாண்டில் ரூபாய் 28 கோடி வரி செலுத்தியுள்ளார்.
அதிக வரி செலுத்தியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்:
- விராட் கோலி - 66 கோடி ரூபாய்
- எம்.எஸ்.தோனி -38 கோடி ரூபாய்
- டெண்டுல்கர் - 28 கோடி ரூபாய்
- கங்குலி -23 கோடி ரூபாய்
- ஹர்திக் பாண்ட்யா – 13 கோடி ரூபாய்
- ரிஷப்பண்ட் - 10 கோடி ரூபாய்
இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் டாப் லிஸ்டில் இல்லையென்றே கூற வேண்டும். அவர் கடந்த நிதியாண்டில் ரூபாய் 10 கோடிக்கும் குறைவான வரியே செலுத்தியுள்ளார்.
இந்தியாவில் உள்ள திரைப்படம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் புகழ்பெற்று விளங்கும் பிரபலங்களிலே அதிக வரி செலுத்துபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். கடந்த நிதியாண்டில் மட்டும் அவர் மொத்தம் 92 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டைச் சேர்ந்த வீரர்களும் பெரியளவில் வருவாய் ஈட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.