Highest Indian Wicket Taker: ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் யார்? யார்? தெரியுமா... ! முழு பட்டியலும் உள்ளே...!
டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், நாளை எஞ்சிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்தியா வெற்றி பெற்றுவிடும். நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் வில் யங் விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின் நடப்பாண்டில் மட்டும் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
கபில்தேவ் (முதல் இடம்)
இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், முதல்முறையாக இந்தியாவிற்கு உலககோப்பையை வென்றுத்தந்தவருமான கபில்தேவ் முதலிடத்தில் உள்ளார். அவர் 1983ம் ஆண்டு 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். கபில்தேவ் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமின்றி, சிறப்பான பேட்ஸ்மேனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாண்டு கபில்தேவ் ஒரே இன்னிங்சில் 83 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கபில்தேவ் ( இரண்டாவது இடம்)
ஒரே ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் கபில்தேவே உள்ளார். 1979ம் ஆண்டு 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்தாண்டு அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரே போட்டியில் 121 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியது அமைந்துள்ளது.
கும்ப்ளே (மூன்றாவது இடம்)
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் முன்னாள் கேப்டனும், முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளருமான கும்ப்ளே உள்ளார். மாயாஜால சுழற்பந்துவீச்சாளரான கும்ப்ளே 2004ம் ஆண்டு 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரே இன்னிங்சில் 141 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியது பதிவாகியுள்ளது. ஒரு போட்டியில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அஸ்வின் ( நான்காவது இடம்)
2016ம் ஆண்டு அஸ்வின் 12 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை கைப்பற்றி நான்காவது இடத்தில் உள்ளார். அந்தாண்டு அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஒரு போட்டியில் 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை கைப்பற்றியது பதிவாகியுள்ளது.
ஹர்பஜன்சிங் ( ஐந்தாவது இடம்)
இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் 2002ம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்தாண்டில் அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதாக பதிவாகியுள்ளது.
ஹர்பஜன்சிங் ( ஆறாவது இடம்)
2008ம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஹர்பஜன்சில் 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்தாண்டில் அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 102 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 153 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது அமைந்துள்ளது.
அஸ்வின் (ஏழாவது இடம்)
2015ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 62 விக்கெட்டுகளை கைப்பற்றி ஏழாவது இடத்திலும் உள்ளார். அந்தாண்டு அவர் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ஹர்பஜன்சிங் : ( எட்டாவது இடம்)
2001ம் ஆண்டு ஹர்பஜன்சிங் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 15 விக்கெட்டுகளையும் அந்தாண்டில் கைப்பற்றியுள்ளார்.
கும்ப்ளே : (ஒன்பதாவது இடம்)
2006ம் ஆண்டு 12 டெஸ்ட் போட்டிளில் ஆடிய கும்ப்ளே 57 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.அந்தாண்டு ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அஸ்வின் : (10வது இடம்)
2017ம் ஆண்டு அஸ்வின் 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 56 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் அந்தாண்டு அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி ஜடேஜா 2017ம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், கும்ப்ளே 1999ம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும், மன்கட் 1952ம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும், 1976ம் ஆண்டு சந்திரசேகர் 11 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும், அஸ்வின் நடப்பாண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளையும், ஜாகிர்கான் 2002ம் ஆண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்