நோ பாலில் ஹாட்-ட்ரிக்! ஒரே போட்டியில் ஐந்து நோ-பால் வீசிய அர்ஷ்தீப்… உருவாக்கிய மோசாமான சாதனைகள் இதோ!
அடுத்த பந்தும் ஃப்ரீ-ஹிட் ஆன நிலையில், அந்த பந்தையும் அர்ஷ்தீப் நோபாலாக வீச, அந்த பந்தை குசல் மெண்டில் சிக்ஸருக்கு விரட்ட ஹர்திக் பாண்டியா அதிர்ந்து போனார்.
இலங்கையுடனான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அரஷ்தீப் சிங் ஹாட்-ட்ரிக் நோ-பால் வீசிய நிலையில் மொத்தமாக இந்த போட்டியில் 5 நோ-பால்கள் வீசி பல மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.
ஹாட்-ட்ரிக் நோ-பால்
நேற்று (வியாழன்) இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் பவுலிங் என இரண்டும் சொதப்பிய நிலையில் தோல்வியை சந்தித்தது. சுமாரான பந்துவீச்சின் காரணமாக விக்கெட்டுகள் எடுக்கத் தவறிய இந்திய அணி அதற்கான பலனையும் அனுபவித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஹர்ஷல் பட்டேலை பெஞ்சில் வைத்து அவரை களமிறங்கினார் ஹர்திக் பாண்டியா. அதுவே அவருக்கு வினையாக அமைந்தது போல ஹாட்-ட்ரிக் நோ பால் வீசி மோசமான சாதனையை படைத்துள்ளார். நம்பிக்கைக்குரிய இளம் திறமையான அர்ஷ்தீப் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியதால் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டத்தை மாற்றும் வகையிலான ஒரு ஓவரை வீச ஆட்டம் இலங்கை அணிக்கு சாதகமானது.
அர்ஷ்தீப் செய்த சேதாரம்
இலங்கை அணி பேட்டிங் செய்த போது இரண்டாவது ஓவரில் தாக்குதலுக்கு வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் மூன்று நோ-பால் பந்துகளை வீசினார். பவர்பிளேயில் இலங்கைக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் இரண்டாவது ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார். இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் தனது முதல் நோ-பால் வீசினார். முதல் நோ-பால் பந்து வீசிய பிறகு, அர்ஷ்தீப் அடுத்த பந்தான ஃப்ரீ-ஹிட்டில் ஒரு பவுண்டரியை விட்டுக்கொடுத்தார், அந்த பந்தும் நோபால் ஆக, அடுத்த பந்தும் ஃப்ரீ-ஹிட் ஆனது. அந்த ஃப்ரீ ஹிட் பந்தையும் அர்ஷ்தீப் நோபாலாக வீச, அந்த பந்தை குசல் மெண்டில் சிக்ஸருக்கு விரட்ட ஹர்திக் பாண்டியா அதிர்ந்து போனார். எப்படியாவது அதனை சரி செய்ய ரவுண்ட் த விக்கெட் வந்து வீசி ஒரு வழியாக ஓவரை முடித்தார்.
உருவாக்கிய மோசமான சாதனைகள்
அந்த ஓவரில் கிடைத்த ஆதிக்கத்தை பயன்படுத்தி பவர்பிளேயில் விக்கெட் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து நிலையான தொடக்கத்தை கொடுத்தது இலங்கை. வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் 2023 ஆம் ஆண்டில் தான் வீசிய முதல் ஓவரிலேயே 19 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமாக ஆண்டை ஆரம்பித்தார். இதன் மூலம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப், டி20 போட்டிகளில் 'நோ பால்'களில் ஹாட்ரிக் பந்து வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார். மேலும் ஒரு போட்டியில் அதிக நோ-பால் வீசிய இந்திய வீரர் என்ற பெயரையும் பெற்றார். அந்த மூன்று நோ-பால்களுக்கு பிறகும் ஆட்டத்தில் இரண்டு நோ-பால்களை வீசினார். இதனால் இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் 5 நோ-பால்கள் வீசியுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அவருடைய நோ-பால் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
Arshdeep 3 Now Balls In a Row🌚🙄#INDvSL pic.twitter.com/2glWGcGvd5
— Zayn (@zayn_baig_) January 5, 2023
இந்திய அணி தோல்வி
நோ-பால்களில் கிடைத்த டாப் கியரை விடாமல் அடித்து விரட்டி, இலங்கை அணி 206 ரன்கள் குவித்த நிலையில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்ப, பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் சோபிக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக், சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பதால் நம்பிக்கையுடன் இருந்தனர் இந்திய ரசிகர்கள். ஆனால் பொறுமையாக ஆடிய ஹர்திக் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹூடாவும் ஆட்டமிழக்க இந்திய அணி 57 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது. அப்போது சூர்யகுமார் மீட்பர் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ஆபத்பாந்தவனாக வந்தார் அக்ஸர் படேல். ஹசரங்கா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். தொடர்ந்து அதிரடி ஷாட்களை அடிக்க மறுபுறம் சூர்யகுமார் என்னும் அரக்கன் இருக்க கண்டிப்பாக வென்று விடலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமாக சூர்யகுமார் ஆட்டமிழக்க, சிவம் மாவி தன் பங்குக்கு சில அதிரடி பவுண்டரிக்களை அடித்தார். பின்னர் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அக்ஸர் பட்டேலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. கடைசி போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் நாளை (ஜன.7) நடைபெற உள்ளது.