ICC : ஐசிசி டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் ஹர்திக் இரண்டாமிடம்… 168 இடம் முன்னேறிய கில்!
பந்து வீச்சில் ஓப்பனிங் பவுலராக சிறந்த பங்களிப்பை அளித்த பின்னர், டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இரண்டாமிடத்தை எட்டியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதன்கிழமை தரவரிசையை அறிவித்தது.
இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் மற்றும் டி20 அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, கடந்த வாரம் நியூசிலாந்துடனான இரு தரப்பு தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் நியூசிலாந்தின் டாப் ஆர்டரை குலைத்து, பந்து வீச்சில் ஓப்பனிங் பவுலராக சிறந்த பங்களிப்பை அளித்த பின்னர், டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இரண்டாமிடத்தை எட்டியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதன்கிழமை தரவரிசையை அறிவித்தது.
ஹர்திக் இரண்டாமிடம்
மொட்டேராவில் நியூசிலாந்துக்கு எதிராக நியூ பாலில் சிறப்பாக பந்து வீசி ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். அதுமட்டுமின்றி நான்கு ஓவர்களில் 4/16 என்ற கணக்கில் பந்து வீசி தனது கரியரின் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இந்த சிறப்பான பங்களிப்பின் பலனாக டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது நபியை பின்னுக்கு தள்ளி, பாண்டியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் உள்ள வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹாசனை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கி உள்ளார். ஆனால் அடுத்த டி20 போட்டியில் இந்திய விளையாட ஒன்றரை மாதம் ஆகும் என்பதால், ஷகிப் சோதப்பினாலே ஒழிய, இப்போதைக்கு முதலிடம் செல்ல பெரிய வாய்ப்புகள் இல்லை.
கலக்கும் ஹர்திக்
16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, மேலும் பேட்டிங்கிலும், 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் மூன்று பட்டியலிலும் முன்னேறியுள்ளார். அவர் பேட்டிங்கில் 53 வது இடத்திலிருந்து 50 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார், பந்து வீச்சாளர்களில் 66 வது முதல் 46 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 இடத்திலும் நீடிக்கிறார்கள்.
கில்லின் வளர்ச்சி
அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை வெல்லும் சதத்தை அடித்த ஷுப்மான் கில் டி20களிலும் ஓப்பனராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் ஐசிசி ஆடவர் டி20 வீரர்கள் தரவரிசையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 30வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 23 வயதான கில், T20I பேட்டிங் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்கு வெளியே இருந்து 168 இடங்கள் முன்னேறி, 30வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் டி20 களில் வெறும் 6 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் கில் 63 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்தது இந்தியாவின் மிகப்பெரிய 168 ரன்கள் வெற்றிக்கு பங்களித்ததுடன், தொடரை 2-1 என கைப்பற்றவும் உதவியது. இந்த ஆட்டம் அவரை 168 இடங்கள் முன்னேற்றி 30வது இடத்திற்கு கொண்டு வந்தது. கில், இப்போது கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் மேலும் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் ஆறாவது மற்றும் டெஸ்டில் 62வது இடத்தில் உள்ளார்.
மற்ற தரவரிசை மாற்றங்கள்
2018 ஆம் ஆண்டின் ஐசிசி U19 ஆடவர் உலகக் கோப்பை வென்ற அணியில் கில்லின் சக வீரரான, இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தரவரிசையில் முன்னேறிய மற்றொருவர் ஆவார். எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இரண்டு இடங்கள் முன்னேறி, 13வது இடத்தைப் பிடித்துள்ளார். கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி எடுத்த மொத்த 66 ரன்களில் 35 ரன்கள் எடுத்த டேரில் மிட்செல், நான்கு இடங்களைப் முன்னேறி 25 வது இடத்திற்கு வந்துள்ளார். கிம்பர்லியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 131 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் ஒருநாள் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 20-வது இடத்துக்கு வந்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 5 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தைப் பிடித்தார். டேவிட் மலான் (பேட்டிங்கில் 31 இடங்கள் முன்னேறி 58வது இடம்) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (பந்து வீச்சாளர்களில் 13 இடங்கள் முன்னேறி 22வது இடம்) ஆகியோர் ஒருநாள் தரவரிசையில் முன்னேறிய மற்ற இங்கிலாந்து வீரர்கள் ஆவார்கள். தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் 11 இடங்கள் முன்னேறி 42வது இடத்தில் உள்ளார்.