Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..! ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Hardik Pandya: இந்திய அணி டி20 உலகக் கோப்பை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்ட்யாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Hardik Pandya: மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட நபராக இருந்து, தற்போது ஒட்டுமொத்த நாடே கொண்டாடும் நபராக ஹர்திக் பாண்ட்யா மாறியுள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி:
பார்படாஸ் தீவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்ரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் 11 ஆண்டுகால காத்திருப்பிற்கு பின், இந்திய அணி தனது முதல் ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு பல வீரர்கள் பங்காற்றினாலும், ஹர்திக் பாண்ட்யாவின் பங்களிப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரை ஒட்டுமொத்த நாடே தற்போது கொண்டாடி வருகிறது.
அணிக்கான வெற்றி வாய்ப்பை உருவாக்கிய ஹர்திக்:
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியில், டிகாக் 39 ரன்கள் மற்றும் ஸ்டப்ஸ் 31 ரன்கள் சேர்த்து அசத்தினர். அதோடு, கிளாசென் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் கனவை சிதறடிக்கும் பணியை செய்து கொண்டு இருந்தார். 16 ஓவர்கள் முடிவில், தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற 24 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 26 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட, 52 ரன்களை விளாசி களத்தில் இருந்தார். இதனால், இந்த ஐசிசி கோப்பையும் நமக்கு கிடையாதா என இந்திய ரசிகர்கள் உடைந்து போய் காணப்பட்டனர். அந்த சூழலில் 17வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா, தனது முதல் பந்திலேயே கிளாசெனை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொடுத்து, கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
#Hardik in tears of Explaining what he gone through for the past 6 months..#Rohit Comes and Gave a Hug & Kiss to him 😭😭😭😭💙 pic.twitter.com/8IUe8rS3Dt
— Mumbai Indians TN (@MumbaiIndiansTN) June 29, 2024
11 வருட காத்திருப்பை பூர்த்தி செய்த ஹர்திக் பாண்ட்யா:
தொடர்ந்து, கடைசி ஓவரில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து அந்த ஓவரை வீச, கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யாவை அழைத்தார். கடும் நெருக்கடி மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் கடைசி ஓவரை வீசிய பாண்ட்யா, தனது முதல் பந்திலேயே மில்லரை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் போட்டி முற்றிலும் இந்தியா பக்கம் திரும்பியது. அடுத்த மூன்று பந்துகளில் 7 ரனகளை விட்டுக் கொடுத்தாலும், ஐந்தாவது பந்தில் ககிசோ ரபாடாவை ஆட்டமிழக்கச் செய்தார். அதோடு, கடைசி பந்தில் வெறும் ஒரு ரன்னை விட்டுக் கொடுத்து, இந்திய அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
ஜீரோ டூ ஹீரோவான ஹர்திக் பாண்ட்யா:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் போது காயமடைந்த ஹர்திக் பாண்ட்யா 6 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் டிரேட் மூலம் மும்பை அணிக்கு மாறி, கேப்டனாக நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக அந்த பொறுப்பில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டதால், மும்பை ரசிகர்கள் ஹர்திக் மீது கோபத்தை வெளிப்படுத்தினர். அதோடு, குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது, அந்த அணி ரசிகர்களும் ஹர்திக்கிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே, ஹர்திக் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்ப, அவரது தலைமையிலான மும்பை அணி தொடரில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதுவும் அவர் மிதான விமர்சனங்களை அதிகபப்டுத்தியது. அதோடு, அவரது மனைவியை பிரிய உள்ளதாகவும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இப்படிப்பட்ட சூழலில் மோசமான ஃபார்மில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அநாவசியமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பலர் பிசிசிஐ முடிவை சாடினார். இந்நிலையில் தான், இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதன் மூலம், ஹர்திக் பாண்ட்யா தற்போது ரசிகர்களால் நாயகனாக கொண்டாடப்படுகிறார்.