Gautam Gambhir: ”உலகக் கோப்பையை வெல்ல நான் உதவமாட்டேன்”.. ஏன் இப்படி சொன்னார் கவுதம் கம்பீர்..?
இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என்று ஒரு மாணவர் அவரிடம் கேட்டபோது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிலளித்தார்.
2024 டி20 உலகக் கோப்பையுடன் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேட தொடங்கியுள்ளது. புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை மே 13ம் தேதி அறிவித்து, மே 27 ம் தேதி விண்ணப்பங்களை பெற்றது.
வெளியான அறிக்கையின்படி, தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் பெயர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. கம்பீரின் வழிகாட்டுதலில் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024 பட்டத்தை வென்றது. இதையடுத்து, ஐபிஎல் 2024 போட்டி முடிந்ததும், கவுதம் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. கம்பீரின் பெயர் உறுதியாகி விட்டது என்றும், பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அபுதாபியில் உள்ள மீடியோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் உரையாடியபோது இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என்று ஒரு மாணவர் அவரிடம் கேட்டபோது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிலளித்தார். அப்போது அவர், “ இந்திய அணிக்கு எனது அனுபவத்தை வைத்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், உலகக் கோப்பையை வெல்ல உதவுவது குறித்து பலரும் என்னிடம் தினமும் பேசுகின்றனர். இந்த கேள்விகளுக்கு இதுவரை யாருடனும் எந்தவொரு விதமான பதிலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது இங்கு உங்களிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன். உங்கள் தேசிய அணிக்கு (இந்திய அணி) பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.
#WATCH | Abu Dhabi, UAE: “...I would love to coach the Indian team. There is no bigger honour than coaching your national team. You are representing 140 crore Indians and more across the globe as well and when you represent India, how can it get bigger than that? It is not me… pic.twitter.com/vWHJSXLyY0
— ANI (@ANI) June 2, 2024
நீங்கள் உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், மேலும் நீங்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அதைவிட பெரியதாக வேறு என்ன இருக்க முடியும்? உலகக் கோப்பையை இந்தியா வெல்ல நான் உதவமாட்டேன், 140 கோடி இந்தியர்கள்தான் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள். எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் விளையாடி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். மிக முக்கியமான விஷயம் அச்சமின்றி இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கம்பீரின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரனான கவுதம் கம்பீர், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர், சிறிது காலம் பாஜகவின் இணைந்து பணியாற்றினார்.
இந்தியாவுக்காக கம்பீர் தனது கடைசி டெஸ்டில் 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீர் இதுவரை இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41.95 சராசரியில் 9 சதங்களுடன் 4154 ரன்கள் எடுத்தார்.
கவுதம் கம்பீர் 147 ஒருநாள் போட்டிகளில் 39.68 சராசரியில் 11 சதங்கள் உள்பட 5238 ரன்கள் எடுத்துள்ளார். 2011 உலகக் கோப்பையின்போது இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இவர், 97 ரன்கள் எடுத்ததே மறக்கமுடியாத இன்னிங்ஸ் ஆகும். இதன் காரணமாக, இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இதுபோக, கம்பீர் இந்திய அணிக்காக இதுவரை 37 போட்டிகளில் களமிறங்கி 7 அரைசதங்கள் உள்பட 932 ரன்கள் எடுத்துள்ளார்.