India vs Pakistan: விரைவில் காந்தி- ஜின்னா ட்ராஃபி.. உற்சாகத்தில் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள்.. ஆனா! ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரப், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரப், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக பிசிபி சார்பில் பிசிசிஐக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பிசிபி தலைவர் ஜகா அஷ்ரப், ” வருடாந்திர காந்தி-ஜின்னா டிராபியை ஆஷஸ் போல் விளையாட பிசிசிஐக்கு நான் முன்மொழிந்தேன். இந்த தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுற்றுப்பயணம் செய்யலாம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளும் பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆனால் இந்தியா மறுத்து வருகின்றன. இது மட்டும் நிறைவேறினால் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மேம்படும்” என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி (இந்தியா vs பாகிஸ்தான்) என்பது எப்போதும் உலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாகும். இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே இருதரப்பு தொடர்கள் நடைபெறவில்லை. ஒவ்வொரு இந்தியனும் தன் நாட்டு அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறான்.
2014ம் ஆண்டு கடைசி தொடர்:
இந்தியா-பாகிஸ்தான் (IND vs PAK) போட்டியானது மிகவும் அரிதானது. மற்ற அணிகளைப் போல இவ்விரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. ஒரு நாடு இன்னொரு நாட்டிற்குச் செல்வதில்லை.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர் நடைபெறவில்லை. இந்த அணிகள் கடந்த 9 ஆண்டுகளாக உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே பங்கேற்று வருகின்றன. சமீபத்தில் ஆசிய கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. போட்டியில் இரண்டு போட்டிகள் நடந்தன, அதில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், இரண்டாவது போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் நடத்தப்படவேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்/டிராபி பரிந்துரை கடிதம் ஒன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு காந்தி-ஜின்னா கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ளது. பிசிபி தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்ற நாடுகளுக்கு இடையேயான தொடரைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொந்த நாட்டிலோ அல்லது நடுநிலையான மைதானத்திலோ விளையாட PCB திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்தாலும், இந்திய அணி இருதரப்பு கிரிக்கெட்டை விளையாடுவதற்கும், பாகிஸ்தானுக்குச் செல்வதற்கும் இந்திய அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் உலகக் கோப்பை இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வருகின்ற 8ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுகிறது. அதனை தொடர்ந்து, அக்டோபர் 14ம் தேதி இந்தியா அணி பாகிஸ்தான் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.