அதிசயம்.. அற்புதம்.. ரெண்டுமே பண்றவங்களுக்கு ஒரே நாளில் பிறந்தநாள்.. கைஃப் போட்ட சூப்பர் போஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவர் 2011 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன்பின்னர் அவரால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் வலம் வந்தார். இன்று அவர் தன்னுடைய 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய ஒருநாள் அணியில் 2000ஆம் ஆண்டு முதல் முறையாக யுவராஜ் சிங் களமிறங்கினார்.
அப்போது முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக வலம் வந்தார். குறிப்பாக 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரில் இவரும் முகமது கைஃபும் ஆடும் ஆட்டத்தை 90 கிட்ஸ் எவரும் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள். அதேபோல் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் விளாசினார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசியது என தொடர்ந்து அசத்தினார்.
Birthday isn't the only thing common to Rajni Sir and my dear friend Yuvraj Singh. They make us believe in miracles, they bring smiles to the faces of millions. Bhai ko pyaar, sir ko salute.@rajinikanth @YUVSTRONG12 pic.twitter.com/FwFbC02hL5
— Mohammad Kaif (@MohammadKaif) December 12, 2021
அதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் யுவராஜ் சிங் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். உலகக் கோப்பை தொடரின் போது தான் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் அவர் என்னுடைய நாட்டிற்காக விளையாடும் போது என் உயிர் பிரிந்தாலும் கவலை இல்லை என்று தொடர்ந்து உலகக் கோப்பை தொடர் முழுவதும் விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை பெற்று தந்தார்.
புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகு அவரால் பழைய அதிரடி ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனினும் அவ்வப்போது சில போட்டிகளில் ஆடி வந்தார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நெருங்கிய நண்பர் முகமது கைஃப் ஒரு வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில்,”ரஜினிகாந்த் சாருக்கும், யுவராஜ் சிங்கும் ஒரே நாள் பிறந்தநாள் என்பது மட்டும் ஒற்றுமையான விஷயமல்ல. அதியசம் மற்றும் அற்புதம் நிகழ்த்துவது, பல கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருவது ஆகிய அனைத்துமே இவர்கள் இருவருக்கும் ஒற்றுமையான ஒன்று. தலைவருக்கும் சல்யூட், என் நண்பனுக்கு அன்பை தருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: அல்லு அர்ஜூனாக மாறிய டேவிட் வார்னர்: கலாய்த்துவிட்ட விராட் கோலி..!