Andrew Symonds: இரவு 11 மணி.. 50கிமீ தூரத்தில் வீடு.. கண்ட்ரோலை மீறிய கார்! சைமண்ட்ஸ் விபத்தில் நடந்தது என்ன?
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமெண்ட் நேற்று நள்ளிரவு விபத்தில் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சைமெண்ட்ஸ் கார் விபத்து தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில் பகுதியில் நடைபெற்ற கார் விபத்து நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தான் வசித்து வரும் டவுன்ஸ்வில் பகுதியில் இருந்து ஹெர்வி ரேஞ் சாலை பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அவருடைய வீட்டிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் புரண்டுள்ளதாக தெரிகிறது.
Australian cricket great Andrew Symonds has died after a car crash in northern Queensland. https://t.co/HRRaJLP603
— cricket.com.au (@cricketcomau) May 14, 2022
இந்த விபத்தில் ஆண்ட்ரூ சைமெண்ட்ஸிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவசர கால உதவி அளிக்கப்பட்ட போது அவர் உயிர் பிரிந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் இயற்கை எய்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரூ சைமெண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 1998ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை களமிறங்கினார். இவர் 198 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் 5088 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 1462 ரன்களும் எடுத்துள்ளார். இவை தவிர ஆஸ்திரேலிய அணிக்காக 14 சர்வதேச டி20 போட்டிகளில் களமிறங்கி 337 ரன்கள் அடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்