சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆருடம்..!
டெஸ்டில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆருடம் கணித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதமடித்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் ஜோ ரூட்டின் சாதனையை பற்றி கூறியதாவது,
“ ஜோ ரூட் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ஜோ ரூட் அவரது கிரிக்கெட் கேரியரில் முக்கியமான கட்டத்தில் உள்ளார். அவர் இன்னும் குறைந்தது 5 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடுவார். இதனால், 15 ஆயிரம் ரன்களை அவரால் எளிதாக தொட முடியும். டெண்டுல்கரில் சாதனை தொடக்கூடிய ஒன்றாகவே உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களிலே ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் மற்றும் விராட்கோலி ஆகிய வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக வலம் வருகின்றனர். இவர்களில் அதிக டெஸ்ட் ரன் அடித்த வீரராக ஜோ ரூட் வலம் வருகிறார். ஜோ ரூட் இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 26 சதங்கள், 5 இரட்டை சதங்கள் மற்றும் 53 அரைசதங்கள் உள்பட 10 ஆயிரத்து 15 ரன்களை விளாசியுள்ளார். அவருக்கு தற்போது 31 வயதே ஆகிறது. சர்வதேச அளவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 14வது வீரராக ஜோ ரூட் உள்ளார்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 68 அரைசதங்கள் உள்பட 15 ஆயிரத்து 921 ரன்களை எடுத்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற அரிய சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். மேலும், அதிக சதங்கள் அடித்த வீரர், ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பல்வேறு அரிய சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட்கோலிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்