Virat Kohl: ”புகழும், அதிகாரமும் கோலியை மாற்றிவிட்டது” - விராட் இப்படிப்பட்டவரா? என ரசிகர்கள் ஷாக்
Virat Kohl: விராட் கோலி பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சொன்ன கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Virat Kohl: விராட் கோலி பற்றி, முன்னாள் வீரர் அமித் மிஷ்ராவின் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமித் மிஸ்ரா நேர்காணல்:
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் நெறியாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையேயான வேற்றுமைகள், ஆரம்பத்தில் தனக்கு தெரிந்த கோலி எப்படி இருந்தார், ஆனால் அவர் இப்போது எப்படி நடந்துகொள்கிறார் என்பன போன்ற பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோலியும், ரோகித்தும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல - அமித் மிஸ்ரா:
கோலி மற்றும் ரோகித் சர்மாவின் நடவடிக்கைகள் மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் எப்படி என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித் மிஸ்ரா, “ஒரு கிரிக்கெட் வீரராக கோலி மற்றும் ரோகித் சர்மாவை நான் மதிக்கிறேன். ஆனால், நான் முன்பு எப்படி விராட் கோலியுடன் பழகினேனோ அப்படி என்னால் தற்போது இருக்க முடியாது. இந்திய அணியில் கோலி ஏன் மிக சொற்பமான நண்பர்களையே கொண்டிருக்கிறார்? அவரது இயல்புகளும், ரோகித்தின் இயல்பும் வித்தியாசமானது. நான் இந்திய அணிக்காக விளையாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், நான் ஐபிஎல் அல்லது வேறு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தால், ரோகித் சர்மா இப்போதும் என்னிடம் ஒரே மாதிரியாக ஜாலியாக நடந்து கொள்வார். அவர் என்ன நினைப்பார் என்று ஆலோசித்து நான் ரோகித் சர்மாவிடம் பேச வேண்டியது இல்லை” என அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி முன்பு இருந்த நபர் கிடையாது - அமித் மிஸ்ரா:
விராட் கோலியில் மாற்றம் உள்ளதா என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, “விராட் கோலி பெருமளவு மாற்றம் கண்டிருப்பதை நான் காண்கிறேன். நாங்கள் பேசுவதையே பெரும்பாலும் நிறுத்திவிட்டோம். புகழும் அதிகாரமும் கிடைத்தால், மற்றவர்கள் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே தங்களை அணுகுகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். சீக்குவை (கோலி) 14 வயதில் இருந்தே தெரியும், அவர் சமோசா சாப்பிடும் போது, அவருக்கு தினமும் இரவு பீட்சா தேவைப்பட்டது. ஆனால் எனக்கு தெரிந்த சீக்குவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது” என அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.
கோலி பற்றி யுவராஜ் சொன்ன கருத்து..!
அமித் மிஸ்ரா சொன்னதை கேட்டதுமே, “சீக்கு எனது நெருங்கிய நண்பராக இருந்ததார், ஆனால் ஸ்டார் கோலி அப்படி இல்லை” என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சொன்னதை நெறியாளர் குறிப்பிட்டார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோலி பற்றி முன்னாள் வீரர்கள் சொல்லும் இந்த கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.