ENG vs WI: காவெம் மிரட்டல் சதம்! ஜோசுவா அசத்தல் பேட்டிங்! இங்கிலாந்தை மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்!
காவெமின் அபார சதம், ஜோசுவாவின் அபார அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை காட்டிலும் 41 ரன்கள் முன்னிலை பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
காப்பாற்றிய அதானசே - காவேம்:
முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி ஒல்லி போப் சதம், கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அபார அரைசதத்தால் இங்கிலாந்து அணி 416 ரன்களை எடுத்தது. சொந்த மண்ணில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வுட், சோயிப் பஷீர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது பந்துவீச்சை கொண்டு வெஸ்ட் இண்டீசை சுருட்டிவிடலாம் என்று எதிர்பார்த்தனர்.
தொடக்க வீரர் லூயிஸ், ப்ராத்வெயிட், மெக்கன்ஸி அடுத்தடுத்து அவுட்டானர். 84 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் தடுமாறிக் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அதானசே – காவேம் ஹோட்கே ஜோடி மீட்டது. இருவரும் சிறப்பாகவும், நிதானமாகவும் ஆடினர். இவர்களை பிரிக்க கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எடுத்த முயற்சிகளை இருவரும் சிறப்பாக எதிர்கொண்டனர்.
சதமடித்த காவெம்:
சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய அதானசே சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானர். 99 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் காவெமிற்கு ஒத்துழைப்பு தந்தார். நிதானமாக ஆடி வந்த காவெம் ஹோட்கே சதம் அடித்து அசத்தினார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடி சதம் விளாசிய காவெம் 171 பந்துகளில் 19 பவுண்டரியுடன் 120 ரன்களுடன் அவுட்டானார். ஹோல்டரும் 27 ரன்களும் ஆட்டமிழக்க, 355 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜோசுவா டா சில்வா கைகொடுத்தார். டெயிலண்டர்களை வைத்துக் கொண்டு தனி ஆளாக வெஸ்ட் இண்டீஸ் அணியை 400 ரன்களை கடக்க வைத்தார்.
கடைசியில் கலக்கிய ஜோசுவா:
பவுண்டரி, சிக்ஸர் என விளாசிய ஜோசுவா அரைசதம் விளாசினார். அவர் 122 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார், கடைசியில் ஷாமர் ஜோசப் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்தது. இதனால், 41 ரன்கள் முன்னிலை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றது. தொடர்ந்து இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது.