IND Vs Aus Series: இந்தியா உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. 18 பேர் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா..!
இந்தியா உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, 18 பேர் கொண்ட அணியை, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்தியா உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்மித் மற்றும் ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:
இந்திய அணி ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வர, ஆஸ்திரேலியா அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதைதொடர்ந்து, இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு ஏதுவாக, ஆஸ்திரேலியா இங்கு சுற்ற்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு:
இந்நிலையில், இந்தியா உடனான தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதில், காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த கம்மின்ஸ், ஸ்மித், ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப உள்ளனர். இது அந்த அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. தென்னாப்ரிக்கா தொடரில் டிராவிஸ் ஹெட் காயமடைந்த நிலையில், மேத்யூ ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி விவரம்:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுசக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், மிட்ச் ஸ்டார்க், மிட்ச் ஸ்மி , மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா
உலகக்கோப்பை தொடர்:
உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கு ஏதுவாக, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் இந்த போட்டி, சென்னையில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு பின்னடைவு:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கையில் ஏற்பட்ட முறிவால், தொடக்க விரரான ஹெட் உலகக் கோப்பையில் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ளது. "ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியதும், மருத்துவ மதிப்பாய்வை மேற்கொண்டு, அவர் தொடரில் விளையாடுவது குறித்து தீர்மானிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை இறுதி செய்ய ஆஸ்திரேலியாவுக்கு செப்டம்பர் 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது.