Deepak Chahar: என் தங்கச்சியை அப்படி பேசாதீங்க.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரகளை செய்த தீபக் சாஹர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் தீபக் சாஹரும் கலந்து கொண்டார்.

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் பங்கேற்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் 19 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் 9வது சீசனாக தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது.
நிகழ்ச்சியில் பேசப்படும் கருத்துகள் தொடங்கி பல விஷயங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறிவிடும். இப்படியான நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது சக போட்டியாளரான குனிக்கா சதானந்த் மால்தியை தன்பாலின ஈர்ப்பாளர் என முத்திரை குத்தியிருந்தார். இது ரசிகர்களிடையே கடும் கண்டனம் பெற்றது.
பிக்பாஸ் வீட்டில் தீபக் சாஹர்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வீட்டுக்குள் தீபக் சாஹர் சென்றிருந்தார். உள்ளே சென்றதும் தனது சகோதரர் மால்தி சாஹருடன் நேரம் செலவிட்ட அவர், நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தொடர்ந்து சக போட்டியாளர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சகோதரியிடம் சக போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதத்தில் தனக்கு பிடிக்காததைப் பற்றி பேசினார்.
அப்போது குனிக்கா சதானந்திடம் பேசும்போது, என்னுடைய தங்கை மால்தியுடன் நீங்கள் வாக்குவாதம் செய்யும்போது அவரை தன் பாலின ஈர்ப்பாளர் என குறிப்பிடும் பொருட்டு லெஸ்பியன் என சொன்னதை நினைவு கூர்ந்தார். இந்த வார்த்தை அவளை நிச்சயம் வருத்தப்பட செய்திருக்கக்கூடும்.
இவ்வளவு பெரிய மேடையில் நீங்கள் ஒருவரை லெஸ்பியன் அல்லது தன் பாலின ஈர்ப்பாளர் என்று அழைப்பதால், அது வெளியே ஒரு தீவிரமான விஷயமாகி விடும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்ததாகவோ அல்லது பொய் சொன்னதாகவோ நான் கூறவில்லை, ஆனால் நீங்கள் அவள் தன் பாலின ஈர்ப்பாளர் என 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக நம்பிக்கையுடன் கூறியது தேவையற்றது என நான் நினைக்கிறேன் என்று தீபக் சாஹர் தெரிவித்தார்.
ஆனால் குனிக்கா சொன்ன வார்த்தை மால்தி அறிந்திருக்கவில்லை. அதனால் இந்த விவாதத்தின்போது அவர் குனிக்காவை எதிர்மறை எண்ணம் கொண்டவள் என குறிப்பிட, மால்தியை தீபக் சாஹர் அமைதிப்படுத்தினார். மேலும் என்னுடைய சகோதரிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அப்படி திருமணமாகாத ஒருவரை பற்றி இப்படி கருத்து சொல்லும்போது அவரை மக்கள் எப்படி பார்ப்பார்கள், சம்பந்தப்பட்டவர் வாழ்க்கை எப்படி பெரிய பாதிப்பை சந்திக்கும் என்பதை உணர வேண்டும்.
ஆனால் குனிக்காவின் மகன் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது மால்தியிடம் தனது அம்மாவின் சார்பாக மன்னிப்பு கேட்டான். ஆனால் தன் மகன் எதற்காக மன்னிப்பு கேட்டான் என்பதை குனிக்கா அறியவே இல்லை என்பதை மால்தி சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து தன் மீதான தவறை மழுப்ப முயன்ற குனிக்கா, ஒரு கட்டத்தில் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார். இந்த விவாதம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.




















