BCCI Sponsor: பிசிசிஐ ஒரு சாபமா? ஸ்பான்சர்களாக வந்து நாசாமாய் போன பெரு நிறுவனங்கள் - ட்ரீம் 11 கதை ஓவர்..
BCCI Sponsor Dream 11: பிசிசிஐ உடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் மேற்கொண்ட பெருநிறுவனங்கள் பல்வேறு சிக்கலில் சிக்குவது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

BCCI Sponsor Dream 11: பிசிசிஐ உடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் மேற்கொண்ட, ட்ரீம் 11 நிறுவனம் தற்போது பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்தியுள்ளது.
பிசிசிஐ ஸ்பான்சர்கள்:
தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் மன்னரை குறித்த மன்னர் தொடர்பான கதையை குறித்து நாம் அறிந்து இருப்போம். அத்தைய மன்னராக கருதியே பல தொழில்நிறுவனங்கள் பிசிசிஐ உடன், விளம்பர ஒப்பந்தங்கள் மேற்கொள்கின்றன. அதன் மூலம், தங்களது நிறுவனம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என நம்புகின்றன. ஆனால், கிரிக்கெட்டையும் தாண்டிய சில காரணங்களால், பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்ட சில நிறுவனங்கள் அடையாளம் தெரியாமல் அழிந்து போயுள்ளன. கிரிக்கெட்டை ஒரு மதமாக போற்றும் இந்தியர்கள் மத்தியில் அந்த விளையாட்டின் வாயிலாக தங்களது வியாபாரத்தை பெருக்க நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. இதற்கான வீரர்கள் அணியும் ஆடைகளில் நிறுவனத்தின் பெயரை பொறிக்க, பல கோடிகளை கொட்டி ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர்.
பயன்படாத ஸ்டார்கள்:
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நட்சத்திர வீரர்கள் நிறுவனங்களின் பெயரை தங்களது ஆடையில் பொறித்து இருப்பதன் மூலம், வெகுஜன மக்களிடையே தாங்கள் எளிதில் சென்றடைவோம் என ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் கணக்கிடுகின்றன. கோடிகளை கொட்டி ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் சில நிறுவனங்கள் நல்ல லாபம் பார்க்கின்றன. அதேநேரம், சில நிறுவனங்கள் நேர் எதிரான வீழ்ச்சியை எதிர்கொள்கின்றன. அந்த வகையில் தான் தற்போது ட்ரீம் லெவன் நிறுவனம் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
ட்ரீம் லெவன் கதை ஓவர்:
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா காரணமாக, இந்திய அணியின் தற்போதைய ஸ்பான்சராக உள்ள ட்ரீம் லெவன் நிறுவனம், பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கேமிங் சந்தையில் பெரும் பங்கை இந்த நிறுவனம் வகித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் மொத்த மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்படுகிறது. பிசிசிஐ உடனான 358 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ உடன் ஒப்பந்தம் மேற்கொண்டபிறகு கடும் நெருக்கடியை எதிர்கொள்வதில், ட்ரீம் லெவன் நிறுவனம் முதலாவது அல்ல.
நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள்:
- 2001ம் ஆண்டில் கம்பீரமாக ஜொலித்த சஹாரா நிறுவனம், செபியின் கட்டுப்பாடுகளால் 2011ம் ஆண்டில் கடும் வீழ்ச்சியை கண்டது. இறுதியில் அதன் உரிமையாளர் சிறையிலும் அடைக்கப்பட்டார்
- ஒளிபரப்பு துறை ஜாம்பவானாக கருதப்பட்ட ஸ்டார் இந்தியா, 2014 முதல் 2017 வரை உச்சத்தில் இருந்தது. ஆனால், அதன் தனிப்பட்ட ஆதிக்கத்திற்கு எதிரான விசாரணைகள் மூலம் நிதி அழுத்தங்களில் சிக்கிக் கொண்டது.
- சீனா தொலைபேசி நிறுவனமான ஓப்போ, இருநாடுகள் இடையேயான அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக்கப்பட்டது
- ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக இருந்த பைஜூஸ், இந்திய அணி மற்றும் ஃபிஃபா ஸ்பான்சர்ஷிப்களையும் கூட கைப்பற்றியது, ஆனால் கடன் மற்றும் மோசடியால் இறுதியில் திவால் நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.




















