Bangladesh Historical Win : வரலாற்று வெற்றி...! நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்திய வங்கதேசம் ..
நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலே முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வங்காளதேச அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
உலகின் ஜாம்பவான் கிரிக்கெட் அணிகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி அளிக்கும் கிரிக்கெட் அணியாக வங்கதேசம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலே முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது வங்கதேச அணி.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி டேவோன் கான்வே சதம், ஹென்றி நிகோலஸின் அரைசத உதவியுடன் 328 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் ஹாசன் ஜாய், ஷான்டோ, கேப்டன் மோமிநுல், லிட்டன் தாஸ் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதங்கள் அடிக்க அந்த அணி 458 ரன்களை குவித்துது.
பின்னர், 130 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூசிலாந்து அணியின் மூத்த வீரரும், நம்பிக்கை அளிக்கும் விதமாக களத்தில் நின்ற ராஸ் டெய்லரும் எபாதத் ஹூசைன் பந்தில் போல்டானார். அவர் 104 பந்தில் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில், கைல் ஜேமிசன் வந்த வேகத்திலே பெவிலியனுக்கு நடையை கட்டினார். பின்னர், ரச்சின் ரவீந்திரா 16 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசிடம் கேட்ச் கொடுத்ஆ ஆட்டமிழந்தார். கடைசியில் டெயிலண்டர்கள் டிம் சவுதி, வாக்னர்,போல்ட் ஆகியோரையும் ஒற்றை இலக்கத்திலே பெவிலியனுக்கு அனுப்பினர். வங்கதேச அணியின் எபாதத் ஹூசைன் சிறப்பாக பந்துவீசி 21 ஓவர்களில் 6 ஓவர்களை மெய்டனாக வீசி 46 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தஸ்கின் அகமது 14 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 42 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 3 ரன்னில் வெளியேறினாலும், நஜ்முல் ஹூசைன் ஷான்டோ 17 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மோமிநுல் மற்றும் முஸ்தபிர் ரஹீம் இலக்கை எட்டிப்பிடித்து நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர். கேப்டன் மோமினுல் 13 ரன்களுடனும், முஸ்தபீர் ரஹீம் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து பேட்டிங்கை நிலைகுலையச் செய்த எபாதத் ஹூசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்