Babar Azam: அமெரிக்காவுடன் அதிர்ச்சி தோல்வி! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அடிமேல் அடி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை செய்திருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.
அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான்:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை டி20 போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்தவகையில் நேற்று (ஜூன் 7) நடைபெற்ற 11 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியை எதிர் கொண்டு விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
மோசமான சாதனை படைத்த பாபர் அசாம்:
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுக்க ஆட்டம் சமநிலையானதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் எடுத்தது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
கத்துக்குட்டி அணிகளிடம் தொடர் தோல்வி:
இதன் மூலம் கேப்டனாக ஒரு மோசமான சாதனையை செய்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையைத்தான் பாபர் அசாம் செய்திருக்கிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது.
இதில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவிலேயே 286 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதேபோல், ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயிடன் தோல்வியை தழுவியது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. அதேபோல் கடந்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து. பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா - பாகிஸ்தான்:
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பையில் பகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் பாபர் அசாம். பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி மற்ரும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அமெரிக்க அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருப்பதால் மீண்டும் அவர் மீது ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 9 ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.