AUS vs WI, 2nd Test: பிரிஸ்பேனில் பின்தங்கிய போதிலும் டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா.. கம்மின்ஸின் துணிச்சலான முடிவு..!
பேட் கம்மின்ஸ் தற்போதைய சிறந்த கேப்டன்களில் ஒருவர். இவர் தலைமையின்கீழ் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் (AUS vs WI 2nd Test) இரண்டாவது நாளில், பேட் கம்மின்ஸ் அணியின் முதல் இன்னிங்சை 289 ரன்களுக்கு டிக்ளேர் செய்தார். இது தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களை ஆல் அவுட் ஆகிய நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 9வது விக்கெட்டை இழந்திருந்தது. இதன்மூலம்,வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 22 ரன்கள் பின்தங்கியிருந்தது ஆஸ்திரேலியா. இருப்பினும், 10-ம் நம்பர் பேட்ஸ்மேன் வர அனுமதிக்காத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து 64 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு ஏன் பாட் கம்மின்ஸ் இப்படி செய்தார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
சிறந்த கேப்டன்களில் ஒருவர்:
பேட் கம்மின்ஸ் தற்போதைய சிறந்த கேப்டன்களில் ஒருவர். இவர் தலைமையின்கீழ் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. மேலும் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கோப்பையையும் வென்று கொடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், அவ்வபோது பேட்டிங்கிலும் பயனுள்ள இன்னிங்ஸ்களை விளையாடுவதற்கும் பெயர் பெற்றவர். இந்த போட்டியிலும் முதல் இன்னிங்சில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த அவர், வேண்டுமானால் 10வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் செய்து தனது சதத்தை பூர்த்தி செய்ய முயற்சித்திருக்கலாம். ஆனால் அணியின் வெற்றியை மட்டுமே யோசித்து அவர், 22 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.
இன்னிங்ஸ் டிக்ளேர் செய்த பிறகு ஒளிபரப்பாளரிடம் பேட் கம்மின்ஸ் பேசியபோது, இதற்கான காரணத்தை விளக்கினார். அப்போது பேசிய அவர், "பிரிஸ்பேனில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதை மனதில் வைத்து இங்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தேன். இது ஒரு நல்ல முடிவு என்றே நினைக்கிறேன்" என்றார். ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டபோது, அன்றைய ஆட்டத்தில் 7 முதல் 8 ஓவர்கள் வரை மீதம் இருந்தன. நேற்றைய நாள் ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 13 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. டேகனரைன் சந்தர்பால் ஆட்டமிழந்த பின்னரே அன்றைய ஆட்டத்தின் முடிவு அறிவிக்கப்பட்டது.
வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா..?
முன்னதாக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 5 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு, கவெம் ஹாட்ஜ் மற்றும் ஜோசுவா டா சில்வா ஆகியோர் இன்னிங்ஸை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். இருவரும் 70 பிளஸ் ரன்களை எடுத்திருந்தனர். பின்னர், கெவின் சின்க்ளேரின் அரைசதம் மற்றும் அல்சாரி ஜோசப் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்கம் மிகமோசமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் 5 பேட்ஸ்மேன்கள் 54 ரன்களில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்து விளையாடினர். அதனை தொடர்ந்து, 5 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்கத்தை கூட கடக்க முடியாமல் அந்த அணி 289 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக, தற்போது ஆஸ்திரேலிய அணி 215 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது.