கூடுவிட்டு கூடு பாய்ந்த புஜாரா-கோலி கூட்டணி! காரணம் என்ன?
கோலி 201 பந்துகளில் 79 ரன்களை எடுத்திருந்தார். கோலியின் ஸ்ட்ரைக்ரேட் 39.3 ஆகும். எப்போதும் மெதுவாக ஆடும் புஜாராவை விட கோலி இந்த இன்னிங்ஸில் மெதுவாக ஆடியிருக்கிறார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய போதும் புஜாராவும் கோலியும் மட்டும் நின்று நிதானமாக ஆடி ஸ்கோர் செய்திருந்தனர். புஜாரா 43 ரன்களையும் கோலி 79 ரன்களையும் எடுத்திருந்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கோலி புஜாராவின் பாணியிலும் புஜாரா கோலியின் பாணியிலும் ஆடியிருந்ததே.
புஜாரா 77 பந்துகளில் 43 ரன்களை எடுத்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 55.84 அதேநேரத்தில் கோலி 201 பந்துகளில் 79 ரன்களை எடுத்திருந்தார். கோலியின் ஸ்ட்ரைக்ரேட் 39.3 ஆகும். எப்போதும் மெதுவாக ஆடும் புஜாராவை விட கோலி இந்த இன்னிங்ஸில் மெதுவாக ஆடியிருக்கிறார். அதேநேரத்தில் அதீத தற்காப்பு தன்மையோடு ஜாக்கிரதையாக ஆடும் புஜாரா கொஞ்சம் அட்டாக்கிங்காக ஆடியிருக்கிறார். இருவரும் கூடுவிட்டு கூடு பாய்ந்ததை போல இப்படி மாற்று அணுகுமுறையோடு ஆடியது ஏன்?
புஜாரா, கோலி இருவரின் சமீபத்திய ஃபார்முமே சரியாக இல்லை. இருவருமே சதமடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அது சாத்தியப்படாமலேயே இருக்கிறது.
புஜாராவை பொறுத்தவரைக்கும் அவர் டிராவிட்டின் அடியொற்றி இந்தியாவின் தடுப்புச்சுவராக அறியப்பட்டவர். அதிகமான பந்துகளை எதிர்கொண்டு பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவதில் வல்லவர். அதுதான் அவரின் தனித்துவமும் கூட. ஆனால், சமீபமாக குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் அவர் க்ரீஸில் அதிக நேரம் நின்று நிறைய பந்துகளை எதிர்கொண்டாலும் பெரிய ரன்களை அடிக்கவே இல்லை. இதனால் அணிக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு நாள் முழுக்க புஜாரா க்ரீஸில் நின்றதை போல தோன்றும் ஆனால் ஸ்கோர் போர்டில் ரன்கள் கூடியிருக்கவே செய்யாது. தற்காப்பை உடைத்து அட்டாக் செய்ய வேண்டிய நேரத்தில் அவுட்டும் ஆகிவிடுவார். இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளில் புஜாராவின் வழக்கமாக இருந்தது.
தொடர்ச்சியாக புஜாரா சொதப்பிக் கொண்டே இருந்ததால் அணியில் அவரது இடமே கேள்விக்குள்ளானது. இந்த சமயத்தில்தான் புஜாரா தனது அணுகுமுறையை மாற்றும் எண்ணத்திற்கு வந்தார். அதிக பந்துகளை எதிர்கொள்வதை இலக்காக வைக்காமல் ஏதுவான பந்துகளில் ஸ்கோர் செய்து கொஞ்சம் அட்டாக்கிங்காக ரன்களை எடுப்பதை இலக்காக வைத்தார். இந்த தென்னாப்பிரிக்க தொடரின் கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 62 பந்துகளில் புஜாரா அரைசதத்தை கடந்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 80+. இது இயல்பான புஜாராவே கிடையாது. அவர் இவ்வளவு வேகமாக ரன் அடிக்கவே மாட்டார். ஆனால், தற்போதைய சூழல் அவரை அப்படி ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறது. இதே அட்டாக்கிங் மனநிலையைத்தான் இந்த மூன்றாவது போட்டியிலும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
அதேநேரத்தில் இன்னொரு பக்கம் கேப்டன் விராட் கோலிக்கு வருவோம். ஏதுவான பந்துகளை அடித்து கொஞ்சம் அக்ரசிவ்வாக ஆடுவதுதான் அவருடைய வழக்கம். ஸ்ட்ரைக் ரேட் 50 க்கு கீழ் செல்லும் அளவுக்கு அவர் பெரிதாக ஆடியதே இல்லை. ஆனால், நேற்று கோலி 79 ரன்களை அடித்த போது கோலியின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 39 மட்டுமே. ஏறக்குறைய புஜாராவின் அணுகுமுறை இது.
கோலியும் இரண்டு ஆண்டுகளாக சதமே அடிக்கவில்லை. அதற்கு மிக முக்கிய காரணமாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சகட்டுமேனிக்கு பேட்டை விட்டு அவர் ஆடிய அக்ரசிவ் ஆட்டமே. இந்த தென்னாப்பிரிக்க தொடரின் முதல் போட்டியிலுமே இரண்டு இன்னிங்ஸிலும் 6-7 வது ஸ்டம்ப் லைனில் சென்ற பந்துகளை ட்ரைவ் ஆடுவதற்காக பேட்டை விட்டு அவுட் ஆகியிருப்பார். கோலியை பொறுத்தவரைக்கும் அவர் வேகமாக ரன் அடிக்க முயல்வதும் பேட்டை விட்டு ஆடுவதும் ஒரு பிரச்சனையாக இருந்தது. அதை சரி செய்யும் வகையிலேயே நேற்றைய இன்னிங்ஸில் ரொம்பவே மெதுவாக ஆடினார். 158 பந்துகளிலேயே அரைசதம் அடித்திருந்தார்.
கோலியின் கரியரிலேயே அவர் அடித்த மிக மெதுவான இரண்டாவது அரைசதம் இது. மொத்தமாக 201 பந்துகளை எதிர்கொண்டு 79 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பௌலர்கள் ஷாட் ஆசையை தூண்டும் வகையில் வீசிய பந்துகளை தொந்தரவே செய்யாமல் லீவ் மட்டுமே செய்து கொண்டிருந்தார். கோலி சந்தித்திருந்த முதல் 50 பந்துகளில் 66% பந்துகளை ஆடவே முயற்சிக்காமல் லீவ் மட்டுமே செய்திருந்தார். இது கோலியிடமிருந்து இதற்கு முன் வெளிப்பட்டிடாத உச்சபட்ச பொறுமையாகும். போட்டி முடிந்த பிறகு பேசிய தென்னாப்பிரிக்க பௌலர் ரபாடாவும் கோலி பந்துகளை சிறப்பாக லீவ் செய்திருந்ததாக பாராட்டியிருந்தார்.
கடைசியில் ரபாடாவின் ஒயிடு பந்தையே துரத்தி சென்று பேட்டை விட்டு அவுட் ஆகியிருந்தாலும் விக்கெட்டுகள் கையில் இல்லாததாலயே கோலி அந்த ஷாட்டை ஆடினார். உறுதியாக இன்னொரு முனையில் நம்பிக்கையளிக்கும் வகையில் யாராவது நின்றிருந்தால், நேற்றே கோலியின் 71 வது சதத்தை கண்டிருக்க முடியும்.