Asia Cup Rewind: சதத்தில் சதம்.. மாஸ்டர் படைத்த புதிய வரலாறு.. மறக்க முடியுமா அந்த தருணத்தை..?
2012ம் ஆண்டு நடந்த ஆசியகோப்பையில் ரசிகர்களின் ஒரு வருட காத்திருப்புக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது சதத்தை விளாசினார்.
ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் என ஆசியாவில் உள்ள அணிகள் மோதும் இந்த தொடரில் இந்தியாவிற்கு என்று ஏராளமான அழகிய நினைவுகள் நிரம்பியுள்ளது.
சதத்தில் சதம்:
அதில் மறக்கவே முடியாத அதியற்புதமான நினைவு சச்சின் டெண்டுல்கரின் 100வது சதமே ஆகும். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே இல்லை என்றே சொல்லலாம். அதிக ரன்கள், அதிக சதங்கள் என தன்வசம் அவர் வைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை ஆகும்.
அப்பேற்பட்ட சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதத்தை விளாசிய பிறகும், ஒருநாள் போட்டியில் தனது 48வது சதத்தை 2011ம் ஆண்டு மார்ச்சில் நாக்பூரில் விளாசினார். அதன்பின்பு, சச்சின் எப்போது 100வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களை சச்சின் ஒரு வருடம் காத்திருக்க வைத்தார்.
சச்சினின் சாதனை:
2012ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் சச்சின் நிச்சயம் சதம் விளாசி சதத்தில் சதம் கண்ட ஒரே வீரன் என்ற வரலாறை படைப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ரசிகர்களின் அந்த ஆசையை அந்தாண்டு நடந்த ஆசியகோப்பையில் சச்சின் நிறைவேற்றினார். மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கம்பீரின் விக்கெட்டை பறிகொடுத்தாலும், அடுத்து வந்த விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்த சச்சின் நிதானமாக ஆடினார்.
அபாரமாக ஆடிய கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க, ரசிகர்கள் ஒரு வருட காத்திருப்புக்கு சச்சின் முற்றுப்புள்ளி வைத்தார். சதம் விளாசி சதத்தில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய அத்தியாயத்தை தனது பெயரில் முத்திரை பதித்தார். அந்த போட்டியில் 147 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்ஸருடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் சச்சின் அவுட்டானார்.
அந்த போட்டியில், எதிர்த்து ஆடிய வங்காளதேசம் தமிம் இக்பால், இஸ்லாம், நசீர் ஆகியோரின் அபார அரைசதம், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் கடைசிகட்ட அதிரடியால் 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும் சச்சின் டெண்டுல்கர் விளாசிய 100வது சதம் என்பதால் இந்திய ரசிகர்களுக்கு எப்போதுமே அந்த போட்டியும், அந்த ஆசிய கோப்பையும் தனித்துவம் வாய்ந்தது ஆகும்.
மேலும் படிக்க: BCCI Media Rights: பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம்.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற போட்டா போட்டி..! வெல்லப்போவது யார்?
மேலும் படிக்க: BCCI Media Rights: பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம்.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற போட்டா போட்டி..! வெல்லப்போவது யார்?