IND vs PAK: மீண்டும் மீண்டும் குறுக்கிட்ட மழை.. ஒத்திவைக்கப்பட்ட போட்டி.. நாளை மீண்டும் மோதல்..!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை மீண்டும் தொடங்குவதற்கு தயாராக இருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் மைதானத்தை தார்ப்பாயால் மூடியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் சூப்பர் 4 போட்டியில் மழை குறுக்கிட்டுள்ள நிலையில், ஆட்டம் 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என்றும், இதையடுத்து, 9 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனறு எதிர்பார்க்கப்பட்டது. போட்டித் தொடங்குவதற்கு தயாராக இருந்த சமயத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் மைதானம் தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. இதனால், போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த போட்டியானது ரிசர்வ் டே வான நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஒத்திவைப்பு:
போட்டி நடைபெறும் கொழும்பு மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவு இருப்பதாக ஏற்கனவே வானிலை நிபுணர்கள் எச்சரித்திருந்த நிலையில், மாலை முதல் மழை பெய்து வருகிறது. இடையில் மழை விட்டதால் அவுட்பீல்ட் உலர்வதற்காக அனைவரும் காத்திருந்தனர். அவுட்பீல்ட் தயாராகி ஆட்டத்தை தொடங்க வீரர்களும், அம்பயர்களும் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், இதற்கு மேல் போட்டியை நடத்த முடியாது என்பதால் ரிசர்வ் டே வான நாளை போட்டி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே லீக் சுற்றில் பல்லேகேலேவில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் மழையால் ரத்தானது. அது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டுள்ளது. மழை நிலவரம் காரணமாக முன்கூட்டியே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டதால், நாளை போட்டி மீண்டும் நடக்கிறது. நாளைய ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
அதிரடி காட்டிய ரோகித் - கில்:
இன்றைய போட்டியில் டாசில் தோற்றாலும் இந்திய அணியின் பேட்டிங் அசத்தலாகவே இருந்தது. குறிப்பாக, ஷாகின் பந்துவீச்சில் தடுமாறி வந்த ரோகித்சர்மா இன்று அவருடைய பந்து வீச்சு உள்பட பாகிஸ்தான் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த சுப்மன்கில்லும் அதிரடியில் கலக்க, இந்திய தொடக்க வீரர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று எண்ணிய பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஷாகின், நசீம் ஷா, ஹாரிஸ் என பாகிஸ்தானின் வேக அஸ்திரங்களான இவர்கள் மூன்று பேர் பந்துவீச்சிலும் ரன்களை விளாசினர். ஷாகின் அப்ரிடியின் முதல் ஓவரிலே இதுவரை யாருமே சிக்ஸர் விளாசியதில்லை என்பதற்கு இன்று ரோகித்சர்மா முற்றுப்புள்ளி வைத்தார். அட்டாக்கிங் கேம் எனப்படும் தாக்குதல் ஆட்டத்தை சுப்மன் – ரோகித் ஜோடி ஆடியதால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆடிப்போகினர் என்றே சொல்லலாம்.ழ
நாளை எப்படி?
முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித்சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சுப்மன்கில் சிறிது நேரத்தில் 52 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 58 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து விராட்கோலி 8 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடனும் ஆடி வந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. 147 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையுடன் நாளை இந்தியா பேட்டிங்கை தொடரும்.
நாளை போட்டி எப்படி இருக்கப்போகிறது? மைதானம் யாருக்கு சாதகமாக மாறும்? என்பது நாளையே தெரிய வரும்.