IND Vs PAK: ஊமை குத்தாய் குத்திவிட்ட இந்தியா.. கைகொடுக்க மறுத்த ஸ்கை பாய்ஸ்.. பாகிஸ்தான் படுதோல்வி
Asia Cup 2025 IND Vs PAK: ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் கைகுலுக்க கூட முன்வராமல் களத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Asia Cup 2025 IND Vs PAK: ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, பாகிஸ்தானுக்கு படுதோல்வியை பரிசளித்துள்ளது.
பாகிஸ்தானை நையப்புடைத்த இந்தியா
பெரும் எதிர்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. துபாயில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள், சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்தில் பொடிநடையாய் திரும்பினர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த ஷாஹிப்ஜாதா 40 ரன்களையும் கடைசியில் அதிரடி காட்டிய, ஷாயின் அஃப்ரிடி 33 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
பாகிஸ்தான் படுதோல்வி
இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் குவிக்க தொடங்கியது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, 13 பந்துகளிலேயே 31 ரன்களை விளாசினார். தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர், பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால், 15.5 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் கிட்டத்தட்ட முதல் இடத்தை உறுதி செய்துள்ளது.
கைகுலுக்க மறுத்த இந்தியா:
பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் எல்லை தாண்டிய பிரச்னைகளின் அனல், நேற்றைய போடிட்யின் போது ஆடுகளத்திலும் உணரப்பட்டது. முதலில் டாஸ் போட்டு முடித்த பிறகு, வழக்கமாக இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கேப்டனின் முகத்தை கூட பார்க்காத, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்து அங்கிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து, போட்டியின் முடிவிலும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது என்பது மரியாதை நிமித்தமாக பின்பற்றப்படுகிறது. ஆனால், நேற்றைய போட்டியில் இலக்கை எட்டியதுமே, பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் நேராக இந்திய பெவிலியனை நோக்கி புறப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்குவதை எதிர்பார்த்து காத்திருக்காமல், பெவிலியனை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நெட்டிசன்கள் கொண்டாட்டம்:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி பதிவு செய்த வெற்றியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஏற்கனவே தக்க பதிலடி கொடுத்த நிலையில், சர்வதேச விளையாட்டு அரங்கிலும் இந்திய அணி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பாராட்டி வருகின்றனர். போடிட்யின்போது கையில் கருப்பு பேட்ஜை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடிய நிலையில், வெற்றியை இந்திய ராணுவத்திற்கும் பஹால்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் சமர்பிப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.




















