Asia Cup 2023: ஆசியக்கோப்பையில் பங்கேற்குமா இந்தியா..? பிசிசிஐ-யிடம் பாதுகாப்பு குறித்த ஆதாரம் கேட்ட பாகிஸ்தான்!
ஆசியகோப்பை விளையாட இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லுமா? இல்லையா? என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை.
ஆசியகோப்பை விளையாட இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லுமா? இல்லையா? என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. இந்தநிலையில், ஆசிய கோப்பை 2023 தொடரை பாகிஸ்தானில் நடத்தப்படாவிட்டால், பாகிஸ்தான் வாரியத்திற்கு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படும் என அந்நாட்டி கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடர் நடப்பது தொடர்பாக நஜாம் சேத்தி ஹைபிரிட் மாடலை பரிந்துரை செய்திருந்தர். தற்போது அதே கருத்தை மீண்டும் முன்வைத்துள்ளார். அதில், ஆசிய கோப்பை தொடரானது ஹைபிரிட் மாடலை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம், ஆசிய கோப்பை ஹைப்ரிட் மாடலின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் கீழ் இந்திய அணி மட்டும் தங்களது போட்டிகளை வேறு நாட்டிலுள்ள மைதானத்தில் விளையாடலாம். மீதமுள்ள நாட்டினர் மட்டும் தங்களது போட்டிகளை பாகிஸ்தானிலே விளையாட வேண்டும். இதை தவிர வேறு எந்த ஒரு முடிவிற்கும் நாங்கள் தயாராக இருக்க மாட்டோம்” என்று கூறினார்
2023 ஆசிய கோப்பையை பாகிஸ்தான் இந்தாண்டு நடத்த இருக்கிறது. ஆனால், இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்திருந்தது. தொடர்ந்து விவாதங்கள், பேச்சு வார்த்தைகள் நடந்தாலும் ஆசிய கோப்பை எங்கு நடைபெறவுள்ளது என்ற இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நடந்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, அப்போதுதான் பிசிபி தலைவர் நஜாம் சேத்தி ஹைப்ரிட் மாடலை முன்வைத்தார்.
பிசிசிஐ-யிடம் ஆதாரம் கேட்ட பிசிபி :
பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை. இருப்பினும், இந்திய அரசு தனது வீரர்களை பாகிஸ்தான் நாட்டிற்கு விளையாட அனுமதிக்கவில்லை என்கிறது. அப்படி நாங்கள் எங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், என்ன பாதுகாப்பில் பிரச்சனை இருக்கிறது என்று எழுத்துப்பூர்வ ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்றும் பிசிபி தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் எங்கள் நாட்டில் விளையாட வருவதால் இந்திய அணியும் வர வேண்டும்” என்றார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே உரசல்:
அரசியல் ரீதியாக மட்டுமல்லாது, விளையாட்டு போட்டிகளிலும் இந்திய - பாகிஸ்தான் அணிகள் பரம எதிரிகளாகவே இப்போது வரை பார்க்கப்படுகிறது இருநாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தன. ஒரு காலம் வரை பரஸ்பரமாக இருநாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்தன. ஆனால், கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கோ, நமது அணி அந்நாட்டிற்கு பயணம் செய்யவோ திட்டமிடவும் இல்லை, மேற்கொள்ளவில்லை. ஆசியகோப்பை மற்றும் உலகக்கோப்பை போன்ற ஐசிசி சார்பில் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதி வந்தனர். அந்த வகையில் தான், நடப்பாண்டிற்கான ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவித்த உடனேயே, இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லாது என பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.