Virat Kohli Century: நாயகன் மீண்டும் வரான்! 1021 நாட்களுக்கு பின் சதமடித்த கோலி! இந்திய ரசிகர்கள் செம ஹாப்பி.!
Virat Kohli Century: ரன்மெஷின் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி 1021 நாட்களுக்கு பிறகு சதமடித்து அசத்தியுள்ளார்.
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி இன்று ஆடிய கடைசி சூப்பர் 4 போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முன்னாள் கேப்டன் விராட்கோலி சதமடித்து அசத்தியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் விராட்கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். சர்வதேச போட்டிகளில் வங்கதச அணிக்கு எதிராக கடைசியாக 2019ம் ஆண்டு சதமடித்திருந்த விராட்கோலி, சரியாக 1021 நாட்களுக்கு பிறகு மீண்டும் சதமடித்துள்ளார். விராட்கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 212 ரன்களை குவித்துள்ளது.
Virat Kohli reflects on the tough times he endured before slamming his 71st international century 🙌#AsiaCup2022 | #INDvAFG
— ICC (@ICC) September 8, 2022
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் விராட்கோலி சதமடித்திருப்பது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள விராட்கோலியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட்கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22- 26-ந் தேதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதமடித்திருந்தார். அந்த டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் அடித்த விராட்கோலி அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எந்தவொரு சதத்தையும் அடிக்காமலே இருந்தார்.
2020ம் ஆண்டு கொரோனாவால் முடங்கிய நிலையில், 2021ம் ஆண்டு பாதி நாட்களும் கொரோனாவால் முடங்கியது. இந்த காலகட்டத்தில் பயோ பபுள்களுக்கு இடையே இந்திய அணி ஆடிய போட்டிகளில் விராட் கோலி சதமடிக்காதது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. சதங்களின் நாயகன் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விராட்கோலி சதமடிக்காதது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட்கோலி அடித்த சதம் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணிக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் சதங்களை விராட்கோலி விளாசியிருந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக சதமடிக்கவில்லை என்ற ஏக்கத்தை இன்று விராட்கோலி தீர்த்து வைத்தார்.
இந்திய அணிக்காக டி20 போட்டியில் முதல் சதத்தை விளாசிய விராட்கோலி, ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் தனது 71வது சதத்தை விளாசியுள்ளார். விராட்கோலி மீண்டும் தனது சதங்கள் பயணத்தை தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரன்மெஷின் என்று செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி இதுவரை இந்திய அணிக்காக 104 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 32 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 584 ரன்களை விளாசியுள்ளார். 262 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43 சதங்கள், 64 அரைசதங்கள் உள்பட 12 ஆயிரத்து 344 ரன்களை விளாசியுள்ளார். 102 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 28 அரைசதங்கள் உள்பட 8 ஆயிரத்து 74 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
டி20 உலககோப்பை தொடருக்கு முன்பாக விராட்கோலி சதமடித்து தனது கம்பேக்கை அளித்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.