Rizwan T20I Record: 7வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை.. டி 20 கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த ரிஸ்வான்...!
5000 டி20 ரன்களை கடந்த 7வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் பி பிரிவில் இந்தியா ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அல்லது ஹாங்காங் அணிகளில் ஒரு அணி தகுதி பெற முடியும். இந்தச் சூழலில் இன்று கடைசி குரூப் போட்டி நடைபெறுகிறது. அதில் பாகிஸ்தான் -ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர்.
அதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த போது ஹாங்காங் பந்துவீச்சாளர் இஹ்சான் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மற்றொரு தொடக்க வீரரான ரிஸ்வான் நிலைத்து நின்று ஹாங்காங் அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் எடுக்க உதவி செய்தார்.
இந்த நிலையில், ரிஸ்வான் 48 ரன்கள் எடுத்திருந்தபோது டி 20 வடிவத்தில் 5000 ரன்களை கடந்தார். இந்த சாதனையை நிகழ்த்திய ஏழாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை ரிஸ்வான் பெற்றார். அதை தொடர்ந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் தனது 14வது அரைசதத்தையும் எடுத்தார்.
14th T20I half-century for @iMRizwanPak 👌
— Pakistan Cricket (@TheRealPCB) September 2, 2022
The opening batter is growing in confidence 👏#AsiaCup2022 | #PAKvHK pic.twitter.com/Zxw2rt3eHE
சோயிப் மாலிக், பாபர் அசாம், முகமது ஹபீஸ், கம்ரான் அக்மல், அகமது ஷாஜாத், மற்றும் உமர் அக்மல் ஆகியோரும் மிகக் குறுகிய வடிவத்தில் 5000 ரன்களைக் கடந்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
மாலிக் 11698 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் ஆல் ஃபார்மேட் கேப்டன் பாபர் 7890 ரன்களும் எடுத்துள்ளனர்.
தொடர்ந்து, ரிஸ்வானும், ஃபாக்கர் ஜமானும் ஜோடி சேர்ந்து 2 விக்கெட்டிற்கு 117 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஃபாக்கர் ஜமான் 41 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளின் உதவியுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த குஷ்தில் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் அதிரடியாக 5 சிக்சர்கள் விளாசி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தார். 15 பந்துகளில் அவர் 35 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் ஒரு சிக்சர் 6 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 78* ரன்கள் எடுத்திருந்தார்.
தற்போது ஹாங்காங் அணி 10 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களுடன் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியை வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.