Asia Cup 2022, IND vs AFG: ரன்மெஷின் கோலி சதம்..! இந்தியா மிரட்டல் பேட்டிங்..! ஆப்கானுக்கு 213 ரன்கள் இலக்கு.!
IND vs AFG, 1 Innings Highlight: விராட்கோலியின் அபார சதத்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பைத் தொடரில் இருந்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் வெளியேறிய நிலையில் இன்று இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் சூப்பர் 4 சுற்றில் தங்களது கடைசி போட்டியில் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் ரோகித்சர்மா இல்லாததால், கேப்டன் கே.எல்.ராகுலுடன் விராட்கோலி ஆட்டத்தை தொடங்கினார். கடந்த போட்டியைப் போல விக்கெட்டுகளை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதால் இருவரும் நிதானமாக ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விளாசி ஓரிரு ரன்களாக எடுத்தனர். இதனால், இந்திய அணி 5.5 ஓவர்களில் 51 ரன்னைத் தொட்டது. இந்திய அணி 10 ஓவர்களில் 87 ரன்களைத் தொட்ட நிலையில், சிறப்பாக ஆடிய விராட்கோலி 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி 11.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. கேப்டனாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அரைசதம் விளாசிய கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அவர் 41 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 62 ரன்கள் விளாசிய நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், அடுத்த பந்திலே அவர் போல்டானார். இந்திய அணி 15 ஓவர்களின் முடிவில் 134 ரன்களை 2 விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்தது. இதனால், கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி அதிரடியாக ஆட முயற்சித்தது. விராட்கோலி கடைசி 5 ஓவர்கள் என்பதால் அதிரடிக்கு மாறினார். இதனால், இந்திய அணி 17 ஓவர்களில் 161 ரன்களைத் தொட்டது.
Innings Break!
— BCCI (@BCCI) September 8, 2022
A stupendous 122* from @imVkohli and a well made 62 from @klrahul as #TeamIndia post a formidable total of 212/2 on the board.
Scorecard - https://t.co/QklPCXU2GZ #INDvAFG #AsiaCup2022 pic.twitter.com/RqpN6t0tOM
கடைசி கட்டத்தில் விராட்கோலி தனது மிரட்டலான பேட்டிங் மூலமாக பவுண்டரிகளாக விளாசினார். 94 ரன்களை எட்டிய விராட்கோலி சிக்ஸர் அடித்து சதமடித்து அசத்தினார். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தனது சதத்தை விளாசியதால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடைசி கட்டத்தில் விராட்கோலி பவுண்டரிகளாக விளாசியதால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது.
இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை எட்டியது. விராட்கோலி 61 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்ஸருடன் 122 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப்பண்ட் 16 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தானில் அனைவரது பந்துவீச்சையும் இந்திய வீரர்கள் விளாசித் தள்ளினர்.
விராட்கோலி சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்ததால் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.