Asia Cup 2022: பெட்ரோலுக்கே வழியில்லை.. கிரிக்கெட்டா? இலங்கையில் இருந்து இடம்மாறும் ஆசிய கோப்பை! திட்டம் என்ன?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இலங்கையில் தொடங்க இருந்தது.
இங்கிலாந்து தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அதன்பின்னர் அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி இலங்கையில் தொடங்க இருந்தது.
இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார சூழல் மற்றும் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக அங்கு ஆசிய கோப்பை நடத்தும் வாய்ப்பு குறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் செயல் இயக்குநர் ஆஷ்லி டிசில்வா பேட்டியளித்துள்ளார். ஒரு ஆங்கில கிரிக்கெட் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், “இரு நாட்டு அணிகள் பங்கேற்கும் தொடரைவிட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை சற்று கடினமான ஒன்று. ஏனென்றால் 10 அணிகளுக்கும் பேருந்து மற்றும் பெட்ரோல் ஆகியவை கொடுக்க வேண்டும். இவை தவிர அணிகளின் மேலாளர் உள்ளிட்டோருக்கும் பெட்ரோல் கொடுக்க வேண்டும். மேலும் ஆடுகளத்தில் மின் விளக்கு எரிய ஜெனரேட்டர்களுக்கும் டீசல் தேவைப்படும். தற்போது இலங்கை நாடு இருக்கும் சூழலில் இந்த நிலை மிகவும் கஷ்டமான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.
யுஏஇயில் ஆசிய கோப்பை?
எனவே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை நாடு யுஏஇயில் நடத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. யுஏஇயில் சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் என்று கருதப்படுகிறது. ஆசிய கோப்பை தொடரில் போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெறும். இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டு முறை குரூப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய தொடர் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முடிவடைகிறது. ஆஃப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள் தொடரில் பங்கேற்க உள்ளன. எனினும் இந்தத் தொடர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்