Ashes Series: 140 ஆண்டுகள் தொடரும் போட்டா போட்டி.. உலகின் பழமையான கிரிக்கெட் தொடர்.. ஆஷஸ் தொடர் உருவான வரலாறு இதோ..!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே இதுவரை 72 ஆஷஸ் தொடர்கள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 34 முறை தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி, வருகின்ற ஜூன் 16ம் தேதி ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழமையான தொடர். இது இன்றளவும் விளையாடப்பட்டு வருகிறது. சரியாக இந்த ஆஷஸ் தொடர் 1882-83 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 1882ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளும் மோதிய இந்த தொடரின் முதல் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்து தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை. இங்கிலாந்தின் இந்த தோல்வி ஆங்கில கிரிக்கெட்டின் மரணம் என்று அப்போதைய அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதிலும் குறிப்பாக அப்போதைய செய்தித்தாள் தி ஸ்போர்ட்ஸ் டைம்ஸ், “ ஆகஸ்ட் 29, 1882 அன்று, ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் மரணித்தது. உடல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படும்” என தெரிவித்தது. இதன் பிறகு, இங்கிலாந்து அணி 1883ல் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்பு, அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஐவோ பிளிங் ஆஷஸ் தொடரை திரும்பப் பெறப் போவதாக கூறியிருந்தார். அப்போது ஆங்கில ஊடகங்கள் இந்த விஷயத்தை 'ரீகெய்ன் தி ஆஷஸ்' என்று அழைத்தன. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, மூன்றாவது போட்டியில், மெல்போர்னில் உள்ள சில பெண்கள் இரண்டாவது போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஸ்டம்புகளை எரித்து சிறிய கோப்பையாக வழங்கினர். இங்குதான் ஆஷஸ் என்றும், ஆஷஸ் தொடராகவும் தொடங்கியது. அப்போதிருந்து, இது ஆஷஸ் கோப்பையாக கருதப்பட்டது. இருப்பினும், ஒரிஜினல் கோப்பை லார்ட்ஸில் உள்ள MCC அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் டூப்ளிகேட் கோப்பையே இப்போது தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இதுவரை அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியது யார்..?
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே இதுவரை 72 ஆஷஸ் தொடர்கள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 34 முறை தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் இங்கிலாந்து 32 முறை தொடரை வென்றுள்ளது. இது தவிர 6 தொடர்கள் சமநிலையில் முடிந்துள்ளன. முன்னதாக 2021-22ல் நடந்த தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது. இம்முறை 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
கடந்த ஐந்து தொடர்களில் ஆதிக்கம் செலுத்தியது யார்?
கடந்த ஐந்து தொடர்களில் ஆஸ்திரேலியா அணியே ஆதிக்கம் செலுத்தியது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 3 முறை தொடரை கைப்பற்றிய நிலையில், இங்கிலாந்து அணி 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் ஒரு தொடர் டிராவில் முடிந்தது.