Ashes 3rd Test: புருக், வோக்ஸ் அசத்தலான ஆட்டம்: 3வது டெஸ்ட் போட்டியில் ”த்ரில் வெற்றி” பெற்ற இங்கிலாந்து
Ashes 3rd Test : புருக் மற்றும் வோக்ஸ் அசத்தலான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை வீழத்தி த்ரில் வெற்றி பெற்றது
ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளிலே 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 237 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 26 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா மூன்றாம் நாள் பாதில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து. மூன்றாம் நாள் முடிவில் 27 எடுத்து இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிராவ்லி(9) பென் டக்கெட் (18) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
நான்காம் நாளில் அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
மிகுந்த எதிர்பார்ப்புடன் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கப்பட்ட சில நிமிடத்திலேயே பென் டக்கெட்(23) ரன்களுக்கு மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபிள்.யூ ஆனார். அடுத்து வந்த மொயீன் அலி(5), ஜோ ரூட்(21), பென் ஸ்டோக்ஸ்(13), ஜானி பேர்ஸ்டோ(5) ஆகியோர் வந்த வேகத்திற்கு பெவிலியனுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்டனர். தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி மட்டும் சில நேரம் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சை சமாளித்து 44 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ்டம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 171 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிக்கொண்டிருந்தது.
வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற புரூக்-வோக்ஸ்
இந்த சூழ்நிலையில் 7-வது விக்கெட்டுக்கு புரூக்குடன் கைகோர்த்தார் ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ். ஆட்டத்தின் நிலைமையை புரிந்துகொண்டு பொறுப்புடன் விளையாட தொடங்கினர். ஒருமுனையில் புரூக் நிதானமாக ஆட மற்றொரு முனையில் கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக ஆடினார். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் ஷாட்பிட்ச் பந்துகளில் மூலம் இவர்களின் பாட்னர்ஷிப்பை தகர்க்க முயன்றும் அந்த முயற்சி பயன் அளிக்காமல் போனது. ஸ்கோர் 230 ரன்கள் எட்டிய நிலையில் புரூக் 93 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தன்வசமாகியது இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு மேலும் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த மார்க் வுட் ஆஸ்திரேலியா கேப்டன் வீசிய பவுன்சர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த சிக்சர் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றி கனவை தவிடுபொடியாக்கினார் மார்க் வுட் . அதிரடியாகவே ஆடிய மார்க் வுட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச இரண்டாவது இன்னிங்ஸில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூழம் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 4வது டெஸ்ட் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி மான்செஸ்ட்ரில் தொடங்குகிறது.