Habiba Islam: வங்கதேச அணியில் 15 வயதே ஆன ப்ளேயருக்கு இடம்! இந்திய அணிக்கு எதிரான டி20யில் வாய்ப்பு!
இந்தியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் 15 வயதே ஆன வங்கதேச வீராங்கனை ஹபீபாவிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆடவர் கிரிக்கெட்டை போல தற்போது உலகம் முழுக்க மகளிர் கிரிக்கெட்டிற்கும் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய மகளிர் அணியும் பல்வேறு நாட்டு மகளிர் கிரிக்கெட் அணிகளுடன் சர்வதேச போட்டிகளில், ஆடி வருகிறது. இந்த சூழலில், இந்திய மகளிர் அணி விரைவில் வங்கதேச மகளிர் அணியுடன் கிரிக்கெட் ஆட உள்ளது.
15 வயது வீராங்கனை:
இந்திய அணியுடன் ஆடும் டி20 தொடருக்கான வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணியில் 15 வயதே ஆன ஹபீபா இஸ்லாமிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சு வீராங்கனையான அவர் அணியில் இடம்பெறுவதன் மூலம், வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சு பலமாகும் என்று அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.
மேலும், அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரூபியா ஹைதரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ரூபியா ஹைதர், தற்போது மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரூபியா ஹைதர் விக்கெட் கீப்பர் மட்டுமின்றி பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டவர்.
இந்தியாவுக்கு எதிரான தொடர்:
இந்திய அணியுடன் வங்கதேசம் மோதும் இந்த மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 30, மே 2, மே 6 மற்றும் மே 9ம் தேதி நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட்டில் நடக்கிறது. நடப்பாண்டில் ஆடவர் டி20 உலகக்கோப்பை நடைபெறுவது போலவே, மகளிர் டி20 உலகக்கோப்பையும் நடக்கிறது. இதனால், டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்காக வங்கதேச அணியை அந்த அணி நிர்வாகம் தயார் செய்து வருகிறது.
இதுதொடர்பாக, வங்கதேச மகளிர் கிரிக்கெட் தலைமை தேர்வாளர் சஜ்ஜித் அகமது கூறியிருப்பதாவது, “ ரூபியா ஹைதர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் எங்களிடம் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். மரூஃபா மற்றும் ஃபரிஹா இருந்தனர். ஹபிபா எங்கள் பேக்-அப் பந்துவீச்சாளராக இருப்பார்.
இந்திய அணிக்கு எதிரான தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமான தொடராக இருக்கும். எங்களது வீராங்கனைகள் சொந்த மண்ணில் ரன்கள் குவிக்கத் தடுமாறி வருகின்றனர். அவர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால், பந்துவீச்சாளர்கள் வழக்கம்போல சிறப்பாக செயல்படுவார்கள்.
டி20 உலகக்கோப்பைக்கு ஆயத்தம்:
இந்திய அணிக்கு எதிரான தொடர் மூலமாக உலகக்கோப்பைக்கு நாங்கள் ஆயத்தம் ஆகிறோம். எங்கள் அணி அமைப்பு, வியூகம், திட்டம் உலகக்கோப்பையை நோக்கியதாக இருக்கும். இதுதான் எங்கள் உலகக்கோப்பைக்கான இறுதி அணி என்று கூற இயலாது. ஆசிய கோப்பை வருகிறது. இன்னும் சில தொடர்கள் உலகக்கோப்பைக்கு முன்பு ஆட உள்ளோம். அதனால், சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.”
15 வயதே ஆன ஹபிபா வங்கதேச அணியில் இடம்பிடித்ததற்கு ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.