Commonwealth Games 2022: 1934- 2018 வரை..! காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன..?
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையே நடத்துவதற்காக தொடங்கப்பட்ட இந்த போட்டித் தொடரில் இந்தியா 1938ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் வரும் 28-ந் தேதி முதல் காமன்வெல்த் திருவிழா நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் வரலாற்றை விரிவாக காணலாம்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையே நடத்துவதற்காக தொடங்கப்பட்ட இந்த போட்டித் தொடரில் இந்தியா 1938ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பங்கேற்ற முதல் போட்டித்தொடரில் இந்தியாவிற்கு ஒரே ஒரு வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்தது. இதன்பின்னர், 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் எந்த பதக்கமும் வெல்லாத இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கத்தை காமன்வெல்த் போட்டியில் வென்றுதந்தவர் மில்காசிங்.
1958ம் ஆண்டு கார்டிப் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக முதன்முறை தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். பின்னர், அடுத்தடுத்து நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று மாறி, மாறி பதக்கங்களை வெல்லத் தொடங்கியது. ஒற்றை இலக்கங்களில் மட்டும் தங்கம் வென்ற இந்தியா முதன்முறையாக 1990ம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரட்டை இலக்கத்தில், அதாவது 13 தங்கங்களை வென்று அசத்தியது. அந்த தொடரில் மட்டும் முதன்முறையாக 32 பதக்கங்களை வென்றது.
பின்னர், மீண்டும் கோலாலம்பூர், விக்டோரியாவில் நடைபெற்ற போட்டியில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தங்கம் வென்ற இந்தியா அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் இரட்டை இலக்கங்களில் தங்கப்பதக்கங்களை வெல்லத் தொடங்கியது. 2010ம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்ற காமன்வெல்த் போட்டி இந்திய தடகள வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தொடர் ஆகும்.
இந்த தொடரில் மட்டும் இந்தியா அதிகபட்சமாக 38 தங்கங்களை வென்றது. 17 வெள்ளிகளை கைப்பற்றியது. 36 வெண்கலப்பதக்கங்களை தன்வசப்படுத்தியது. இந்த தொடரில் மட்டும் இந்தியா முதன்முறையாக 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று அதாவது 101 பதக்கங்களை வென்று காமன்வெல்த் வரலாற்றிலே முதன்முறையாக 2வது இடத்தைப் பிடித்து அசத்தியது.
காமன்வெல்த் வரலாற்றில் இதுவரை இந்தியா 17 காமன்வெல்த் தொடரில் பங்கேற்று 181 தங்கங்களையும், 173 வெள்ளிகளையும், 149 வெண்கலப் பதக்கங்களையும் என மொத்தம் 503 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. நடப்பு தொடரிலும் இந்திய வீரர்கள் அசத்துவார்கள் என்று மக்கள் காத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்