Chess Olympiad 2022: செக்மேட் 2: சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை உடைத்த முதல் அமெரிக்க ஜாம்பவான்!
செஸ் விளையாட்டில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தவர்களில் ஒருவர் அமெரிக்காவின் பாபி ஃபிஸ்சர்
![Chess Olympiad 2022: செக்மேட் 2: சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை உடைத்த முதல் அமெரிக்க ஜாம்பவான்! Chess Olympiad 2022: Bobby Fischer's inspiring journey in chess and his downfall ahead of Chess olympiad 2022 in chennai Chess Olympiad 2022: செக்மேட் 2: சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை உடைத்த முதல் அமெரிக்க ஜாம்பவான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/19/660b0e1a9ccf0b80c65ef92b90bb93471658216407_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செஸ் ஒலிம்பியாட் இன்னும் 9 நாட்களில் மாமல்லபுரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செக் மேட் என்ற இந்தத் தொடரில் செஸ் தொடர்பான சில விஷயங்களை தினமும் நாம் பார்த்து வருகிறோம்.
அந்தவகையில் செஸ் விளையாட்டில் பாபி ஃபிஸ்சர் யார்? அவர் செய்த சிறப்பான காரீயம் என்ன? அவர் ஏன் செஸ் விளையாட்டை விட்டார்?
பாபி ஃபிஸ்சர்:
1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் பிறந்தவர் பாபி ஃபிஸ்சர். இவர் தன்னுடைய 6 வயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொள்ள தொடங்கினார். அப்போது முதல் இவர் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
கேம் ஆஃப் செஞ்சுரி:
1956ஆம் ஆண்டு பாபி ஃபிஸ்சர் நியூயார்க் நகரில் நடைபெற்ற செஸ் போட்டி ஒன்றில் டொனால்ட் பிரையனை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் 17வது நகர்த்தலில் ஃபிஸ்சர் தன்னுடைய ராணியை இழந்தார். எனினும் அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டொனால்ட் பிரையனை வீழ்த்தினார். இந்தப் போட்டி அப்போது கேம் ஆஃப் செஞ்சுரி என்று பலரால் பாராட்டப்பட்டது.
உலக சாம்பியன்ஷிப் போட்டி:
16 வயதில் பாபி ஃபிஸ்சர் தன்னுடைய பள்ளிப்படிப்பை விடுத்து முழு நேரமாக செஸ் விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் 8 முறை அமெரிக்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். குறிப்பாக 1964ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அமெரிக்க செஸ் சாம்பியன்ஷிப் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 1970-71 ஆம் ஆண்டுகளில் இவர் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க:செக்மேட் 1: செஸ் ஒலிம்பியாடும்... வரலாறு காணாத செஸ் வளர்ச்சியும்..
சோவியத் ரஷ்யா ஆதிக்கத்தை உடைத்த ஃபிஸ்சர்:
இவர் 1972ஆம் ஆண்டு முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். அத்துடன் இரண்டாம் உலகப் போருக்கு பின்பு நடைபெற்ற அனைத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் சோவியத் ரஷ்ய வீரர்கள் வென்று கொண்டிருந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை முதல் முறையாக பாபி ஃபிஸ்சர் தகர்த்தார்.
செஸ் விளையாட மறுப்பு:
உலக சாம்பியன் பட்டத்தை வென்று இருந்த பாபி ஃபிஸ்சர் 1974ஆம் ஆண்டு தன்னுடைய பட்டத்தை தக்க வைக்க நடைபெற்ற போட்டியில் இவர் விளையாடவில்லை. அவர் செஸ் விளையாட்டில் சில விதிமுறைகள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். எனினும் அதை சர்வதேச செஸ் சங்கம் ஏற்கவில்லை. இதன்காரணமாக அவர் செஸ் விளையாட்டை நிறுத்தினார். சுமார் 20 ஆண்டுகள் அவர் செஸ் விளையாடாமல் இருந்தார்.
அமெரிக்க குடியுரிமை பறிப்பு:
2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இவர் ஆதரவான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக இவருடைய அமெரிக்க குடியுரிமை பறிக்கப்பட்டது. அதன்பின்னர் இவருக்கு 2005ஆம் ஆண்டு ஐஸ்லாந்து குடியுரிமை வழங்கப்பட்டது. இவர் 2008ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)