BALL OF CENTURY : "இந்த நூற்றாண்டிற்கான சிறப்பான பந்துவீச்சு"- வைரலாகும் இந்திய வீராங்கனையின் பந்துவீச்சு வீடியோ
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே வீசிய பந்தை மகளிர் கிரிக்கெட்டின் இந்த நூற்றாண்டிற்கான சிறந்த பந்துவீச்சு என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் புகழாரம் சூடியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு. ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாண்டில் உள்ள காரரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 119 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய மகளிர் அணி களமிறங்கியது. இந்திய அணிக்காக முதல் ஓவரை ஷிகா பாண்டே வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே ஆஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனை ஆலிசா ஹீலி போல்டாகி வெளியேறினார்.
Unreeeeeeal! 😱 How far did that ball move? #AUSvIND pic.twitter.com/D3g7jqRXWK
— cricket.com.au (@cricketcomau) October 9, 2021
வேகப்பந்து வீச்சாளரான ஷிகா பாண்டே வீசிய பந்து ஸ்டம்பில் இருந்து விலகிதான் பிட்சில் குத்தியது. ஆனால், அந்த பந்து சுழற்பந்தில் சுழல்வது போன்று சட்டென்று ஸ்விங் ஆகி ஸ்டம்பின் பெய்ல்ஸ்களை பெயர்த்தது. ஒரு கணம் பேட் பிடித்த ஆலிசா ஹீலியே என்ன நடந்ததென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
Ball of the century, women's cricket edition! Take a bow Shikha Pandey🙌🏻 #AUSvIND pic.twitter.com/WjaixlkjIp
— Wasim Jaffer (@WasimJaffer14) October 9, 2021
இந்திய வீராங்கனையான ஷிகா பாண்டேவை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில், மகளிர் கிரிக்கெட்டில் இந்த நூற்றாண்டிற்கான பந்து என்று ஷிகா பாண்டேவிற்கு புகழாரம் சூடியுள்ளார்.
முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, ரோட்ரிக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் நிதானமாக ஆடினார். அவரும் 28 ரன்களில் ஆட்டமிழக்க தீப்தி ஷர்மா, பூஜா ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பூஜா வஸ்திரகர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 3 பவுண்டரிகள். 2 சிக்ஸருடன் 37 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை எடுத்தது.
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் தஹீலா மெக்ராத் 33 பந்தில் 42 ரன்கள் குவித்து 5 பந்துகள் மீதம் வைத்த ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். ஷிகா பாண்டே இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Anshu Malik Won Silver: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை ; யார் இந்த அன்ஷூ மாலிக்?