Asian Games 2023: ஆசிய போட்டிகள்.. அருணாச்சல பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சில இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சீனா அனுமதிக்க மறுத்துள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய போட்டிகளில் இந்தியாவின் அருணாசல பிரதேச வீராங்கனைகள் பங்கேற்க சீனா மறுத்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சில இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சீனா அனுமதிக்க மறுத்துள்ளது. இதனால், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சீன பயணத்தையும் ரத்து செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, எங்கள் நீண்டகால மற்றும் நிலையான நிலைப்பாட்டிற்கு ஏற்ப, குடியுரிமை அல்லது இனத்தின் அடிப்படையில் இந்திய குடிமக்களை வேறுபடுத்துவதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது, எப்போதும் இருக்கும்," என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் கூறினார். இந்த நடவடிக்கைகள் "ஆசிய விளையாட்டுகளின் நடத்தையை விதிகளை மீறுவதாக" அரசாங்கம் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.
இந்தியா – சீன இடையே பல லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தாலும், இரு நாடுகள் இடையே எல்லைப்பிரச்சினை அவ்வப்போது வெடித்து வருகிறது.
குறிப்பாக, இந்தியாவின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய – சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தம் என்று சொல்லி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் அவ்வப்போது உள்ளே நுழையவும் சீனா முயற்சித்து வருகிறது.
புதிய வரைபடம்:
இதனால் இந்தியா – சீனா இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அண்மையில் சீனா ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அந்த பகுதியில் இந்தியாவிற்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை இணைத்துள்ளது. அந்த வரைபடத்தில் இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை அக்ஷயா சின் என்று குறிப்பிட்டுள்ளதுடன், அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று குறிப்பிட்டுள்ளது.
சீனா வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடத்தில் இந்தியாவின் நிலப்பகுதிகள் மட்டுமின்றி பிற நாடுகளின் எல்லைப்பகுதிகளையும் சீனா உரிமை கோரியுள்ளது. தைவான் நாட்டின் சில பகுதிகளையும் தனது வரைபடத்தில் இணைத்துள்ளது.
சீனா அடாவடி:
அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடு என்பதால் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் இதுபோன்ற அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும் சீனாவின் அத்துமீறலுக்கு நேரடியாக கண்டனம் தெரிவித்தும், பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கம்பும், கட்டைகள், கற்கள் என இரு தரப்பு வீரர்களும் சரமாரியாக மோதிக்கொண்டனர். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி நிகழ்ந்த இந்த மோசமான சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாக உளவுத்துறை தகவல்கள் வெளியாகிய நிலையில், சீனாவோ நான்கு பேர் மட்டும்தான் உயிரிழந்ததாக கூறியது.
இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பில் அருணசல பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வது என்பது சீனாவிற்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனைகளை சீனா அனுமதிக்க மறுக்கிறது என கூறப்படுகிறது.