India - Pak: பரபரப்பான ஸ்டேடியம்.. மோதலில் முடிந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்..! இதுவரை ஹாக்கியில் நடந்த சம்பவங்கள்..!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே கவுதம் கம்பீர் - கம்ரான் அக்மல் இடையிலான வாக்குவாதம் நினைவுக்கு வரும். கிரிக்கெட்டைத் தாண்டி ஹாக்கியிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. அவை உங்களுக்காக கீழே...
ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 7வது பதிப்பானது இந்த ஆண்டு சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா - பாகிஸ்தான்:
இந்திய ஹாக்கி அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதுவரை நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை, அதே நேரத்தில் பாகிஸ்தான் ஒரு வெற்றி, இரண்டு டிரா மற்றும் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே 2010 ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் கவுதம் கம்பீர் மற்றும் கம்ரான் அக்மல் இடையிலான வாக்குவாதம், 1996 கிரிக்கெட் உலகக் கோப்பையில் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அமீர் சோஹைல் இடையிலான சைகைகள்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், கிரிக்கெட்டைத் தாண்டி ஹாக்கியிலும் இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளன. அவை உங்களுக்காக கீழே...
2014 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி:
2014ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - இந்திய ஹாக்கி அணிகள் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் மோதியது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. அப்போது போட்டி முடிய இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் அர்ஸ்லான் காதிர் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால், பாகிஸ்தான் அணி 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அந்த நிமிடத்தில் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கவே, அதீத உற்சாகத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் . இந்திய ரசிகர்களை நோக்கி தங்கள் ஜெர்சியை கழற்றி நடுவிரலால் ஆபாசமாக சைகை காட்டினார். இதனால் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கடும் கோபம் அடைந்தது.
தொடர்ந்து, முஹம்மது டூசிக் மற்றும் அலி அஜ்மத் ஆகியோர் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் (FIH) இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் விளைவாக, பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் (PHF) முறையான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை, பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு இருதரப்பு தொடரையும் விளையாடுவதை இந்தியா முடிவு செய்தது. அந்த மன்னிப்பு வரவே இல்லை.
2011 - முத்தரவு ஹாக்கி தொடர்:
அக்டோபர் 2011 இல், முத்தரப்பு தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன், இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும் பாகிஸ்தான் அணி எங்கே பின்தங்கப் போகிறது. இரண்டாவது பாதியில், பாகிஸ்தான் வீரர்கள் வலுவான மீண்டு வந்து போட்டியை 3-3 என சமன் செய்தனர். அதுவரை எல்லாம் சரியாக இருந்தது. இறுதி ஓசை ஒலிக்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன.
வம்பிழுக்கும் பாகிஸ்தான் வீரர்கள்:
இந்திய வீரர்கள் பொறுமையாக விளையாடினர், இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இந்த பெனால்டிக்கு முன்பே பாகிஸ்தான் வீரர்கள், இந்திய வீரர்களை வம்பிழுத்தாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களான சையத் இம்ரான் ஷா மற்றும் ஷஃப்கத் ரசூல் ஆகியோருடன் இந்தியாவின் குர்பஜ் சிங் தகராறில் ஈடுபட்டார். அந்த நேரத்தில், பாகிஸ்தான் வீரர்கள் சையத் இம்ரான் ஷா மற்றும் ஷஃப்கத் ரசூல் ஆகியோர் குர்பாஸை தாக்கவே, அவரது தலை உடைந்து அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாக்கிய ரசிகர்கள்:
இதை பார்த்த இந்திய ரசிகர்கள் கல்லை கொண்டு பாகிஸ்தான் வீரர்களை தாக்க தொடங்கினார். இதையடுத்து, இந்திய ரசிகர்கள் தனது வீரர்களையும் தாக்கியதாக பாகிஸ்தான் ஹாக்கி பயிற்சியாளரின் மேலாளர் குற்றம் சாட்டினார். குர்பஜ் சிங்கிற்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்திய அணியின் குர்விந்தர் சிங் சண்டி மற்றும் உதவி பயிற்சியாளர் ஜுக்ராஜ் சிங் ஆகியோருக்கு 5 போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் ஷகீல் அப்பாஸ் ஆகியோருக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டது.
1990- ஹாக்கி உலகக் கோப்பை:
பாகிஸ்தான் லாகூரில் நடந்த 1990 ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பங்கேற்க சென்றபோது, வீரர்கள் மீது பாட்டில்கள், செங்கற்கள், செருப்புகள் வீசப்பட்டது. இருப்பினும், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு டிரா மட்டுமே செய்து கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.