IndvsPak: பழி தீர்க்குமா பாகிஸ்தான் அணி? சூப்பர் 4 சுற்றில் வெற்றி யாருக்கு?
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலபரீட்சை நடத்தவுள்ளன!
ஆசிய கோப்பை போட்டி:
ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் ஆசிய உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட ஆறு நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஆட்டம் கடந்த 28-ந்தேதி நடந்தது.
இந்தியா-பாகிஸ்தான் முதல் ஆட்டம்!
ஆசிய கோப்பை போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி துபாயில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, பத்தொன்பதாவது ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, சீக்கிரமே குறிப்பிட்ட ரன்களை விரட்டி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கே தான் வந்தது ‘ட்விஸ்ட்’. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரன்களை எடுக்க இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோர் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர், அணியை கரைசேர்க்கும் பொருட்டு, நிதானமாக ஆடி சிறிது ஸ்கோர் செய்தனர். ஆனால் அவர்களும் விக்கெட்டுகளை விரைவில் இழந்த நிலையில், இந்திய அணியின் ரசிகர்களுக்கு வழக்கம் போல ‘டென்ஷன்’ எகிற ஆரம்பித்தது. இதனால், இந்திய அணி ஜெயிக்குமா ஜெயிக்காத என்ற நிலையில் அனைவரும் விழி பிதுங்கி நிற்க, அப்போது களமிறங்கினார் ஹர்திக் பாண்ட்யா.
சுமாரான மேட்சாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அன்றைய ஆட்டம், சூடுபிடிக்க ஆரம்பித்தது. கடைசியில், பத்தொன்பதாவது ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது இந்திய அணி. இதையடுத்து கடந்த மாதம் 31ந்தேதி ஹாங்காங் அணியுடன் இந்திய அணி மோதியது. இந்த ஆட்டத்திலும், 40 ரன் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
சூப்பர் 4 அணிகள்:
ஹாங்காங்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 193 ரன்களை விரட்டி, எதிரணிக்கு பயம் காட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஹாங்காங் அணியை ரன்களே எடுக்க விடாமல் 10-வது ஓவரிலேயே 10 விக்கட்டையும் கைப்பற்றியது பாகிஸ்தான். இந்திய அணியிடம் மயிரிழையில் தோற்றதை மனதில் வைத்திருந்த பாகிஸ்தான், இந்த ஆட்டத்தில் தனது மொத்த வெறித்தனத்தையும் வெளிப்படுத்தி ஹாங்காங் அணியை துவம்சம் செய்தது. இதனால், சூப்பர் 4 அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் இடம் பெற்றது .
நாளைய ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான்!
சூப்பர் 4 அணிகளாக ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டம் நாளை இரவு, 7:30 மணியளவில் துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் ஆதி காலத்திலிருந்தே ஆகாது என்பது அனைவரும் அறிந்த கதை. இதனால், முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியிடம் மன்னை கவ்விய பாகிஸ்தான் அணி, தக்க பதிலடி கொடுக்குமா, அல்லது வேறு ஏதாவது நடக்குமா என்ற கேள்வியுடன் கிரிக்கெட் ரசிகர்கள் நாளைய ஆட்டத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.