Praggnanandhaa: உலகத்துல தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்ல.. பிரக்ஞானந்தா வெற்றியால் பூரித்துப்போன உலக புகழ் செஸ் வீரர்!
பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாய்க்கும் வாழ்த்துக்கள். எல்லா நிகழ்விலும் எனது அம்மா எனக்கு துணையாக நின்ற பெருமைக்குரியவன் என்ற முறையில் கூறுகிறேன் என மூத்த செஸ் வீரர் கேரி கேஸ்பரோவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா வென்று இறுதிப்போட்டியை அடைந்தார். இந்த போட்டிகளில் பெருமை பொங்க நிற்கும் அவரது தாயின் புகைப்படம் வைரலாக அதே போல தான் விளையாடும்போது தாயின் ஆதரவை பெற்ற மற்றொரு உலக சாம்பியன் நெகிழ்வுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
முதல் இரண்டு போட்டிகள் டிரா
4 டை பிரேக்கர்களின் முடிவில் உலகின் 2-ம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், இதன் மூலம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78வது நகர்த்தலில் டிரா செய்தார். இந்நிலையில் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன. அரையிறுதிச் சுற்றின் 2வது ஆட்டத்தில், வெள்ளை காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 47வது காய் நகர்த்தலின் போது டிரா செய்தார். இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்த நிலையில், டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் முடிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
He said "Your photo on Twitter was huge!"
— PhotoChess (@photochess) August 21, 2023
I said, "It is because you ARE huge!" @rpragchess and his lovely mum are IN THE #FIDEWorldCup2023 FINAL ♥️ pic.twitter.com/2bJP21yBGN
டைபிரேக்கரில் வெற்றி
டைபிரேக்கரில் டைமர் வைத்து வேகமாக காய்நகர்த்த வேண்டும். அதில் மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும். அதன்படி நடந்த ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்கள் டிரா ஆனது. 3வது ஆட்டத்தில் கறுப்பு காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 63வது நகர்த்தலில் சாதுர்யமாக எதிரணி வீரர் ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்து முன்னிலை பெற்றார். கடைசி ஆட்டத்தில் ஃபேபியானோ வென்றால் ஆட்டம் மீண்டும் டிரா ஆகி இருக்கும். ஆனால் டிரா செய்தால் கூட பிரக்ஞானந்தா வென்று விடலாம் என்ற நிலையில், ஆட்டம் டிரா ஆனது. பிரக்ஞானந்தா 3½-2½ என்ற கணக்கில் ஃபேபியானோவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
வைரலாகும் தாயின் புகைப்படங்கள்
இந்த நிலையில் பிரக்ஞானந்தா ஆடும் போட்டிகளில் போட்டி நடைபெறும் இடத்தில் காத்திருக்கும் அவரது தாயின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவர் வென்ற மகிழ்ச்சியில் பெருமை கொண்டு நிற்கும் தாயின் புன்னகை உலகெங்கும் உள்ள பலரை நெகிழச் செய்துள்ளது. இந்த நிலையில் மூத்த செஸ் வீரரும் 13வது செஸ் உலகக்கோப்பையின் சாம்பியனும் ஆன, கேரி கேஸ்பரோவ் ஒரு பதிவை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Congrats to @rpragchess—and to his mother. As someone whose proud mama accompanied me to every event, it's a special kind of support! The Chennai Indian defeated two New York cowboys! He has been very tenacious in difficult positions. https://t.co/y8oJ6Z446M
— Garry Kasparov (@Kasparov63) August 21, 2023
எல்லா நிகழ்விலும் தாயின் ஆதரவு பெற்றவர் என்ற முறையில் சொல்கிறேன்…
Photo Chess என்ற X சமூக வலைதள பக்கம் வெளியிட்ட பிரக்ஞானந்தா தாயின் புகைப்படங்களைப் குவோட் செய்து, "பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாய்க்கும் வாழ்த்துக்கள். எல்லா நிகழ்விலும் எனது அம்மா எனக்கு துணையாக நின்ற பெருமைக்குரியவன் என்ற முறையில், கூறுகிறேன். இது அவருக்கு மிகப்பெரிய ஆதரவு! இரண்டு நியூயார்க் வீரர்களை வீழ்த்திய சென்னை இந்தியன்! கடினமான சூழல்களில் கடுமையாக போராடியுள்ளார்!," என்று பெருமையுடன் எழுதியுள்ளார். கேரி கேஸ்பரோவின் தாயும் அவருடைய செஸ் போட்டிகளின் போது அவரோடு வந்து நின்று ஆதரவளித்துள்ளார். அதனை குறிப்பிட்டு இருவருக்கும் சேர்த்து அவர் வாழ்தியுள்ளது பலரை உருகச் செய்துள்ளது. இந்த செஸ் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. மற்றொரு அரையிறுதியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர்கொண்டார். 43வது காய் நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி பெற்று முழு புள்ளியும் பெற்ற நிலையில், நேற்று நடந்த 2வது போட்டியை கார்ல்சன் டிரா செய்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.