Dhoni Record Broken: தோனி சாதனை காலி..! 18 வருட புகழை தட்டிப்பறித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்
முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
![Dhoni Record Broken: தோனி சாதனை காலி..! 18 வருட புகழை தட்டிப்பறித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் குர்பாஸ் afghanistan Rahmanullah Gurbaz Breaks MS Dhoni’s Iconic Record Against Pakistan With Sensational 151-Run Knock Dhoni Record Broken: தோனி சாதனை காலி..! 18 வருட புகழை தட்டிப்பறித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/f35397712953fc87db3fde6285dc07a81692933931924732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிரிகெட் உலகில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நீண்ட காலமாக நீடித்து வந்த தோனியின் சாதனையை, ஆப்கானிஸ்தான் வீரர் ரஹமனுல்லா குர்பாஸ் முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல்:
இந்த மாத இறுதியில் தொடங்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது . முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
குர்பாஸ் அபாரம்:
போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க விரரும் விக்கெட் கீப்பருமான 21 வயதே ஆன ரஹமனுல்லா குர்பாஸ் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி, 151 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 151 ரன்களை குவித்தார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை சேர்த்தது. இருப்பினும் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
புதிய சாதனை:
இதனிடையே, கிரிக்கெட் உலகில் 18 ஆண்டுகளாக நிலைத்து இருந்த, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை குர்பாஸ் முறியடித்துள்ளார். அதன்படி, ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 150 ரன்களை குவித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை குர்பாஸ் பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் தனதாக்கினார். மேலும், குறைந்த போட்டிகளில் 5 ஒருநாள் சதங்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியலில், குயின்டன் டி காக் (19) மற்றும் இமாம்-உல்-ஹக் (19) ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். அந்த பட்டியலில் 23 போட்டிகளில் 5 சதங்களை பூர்த்தி செய்து குர்பாஸ் 2வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (25) இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
தோனி சாதனை தகர்ப்பு:
முன்னதாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்த, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு விஷாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக123 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட தோனி 148 ரன்களை குவித்து இருந்தார். இதுவே, ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கீப்பரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக கடந்த 18 ஆண்டு கால சாதனையாக இருந்தது. இந்நிலையில், தோனியின் அந்த சாதனையை 151 ரன்கள் சேர்த்து குர்பாஸ் தகர்த்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)