Madhavan Son: தேசிய கொடியை கம்பீரமாக ஏந்திச்சென்ற மாதவன் மகன்.. யூத் காமன்வெல்த் அணிவகுப்பில் அசத்தல்..! வீடியோ
18 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் தேசிய கொடியை நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஏந்திச்சென்றார்.
இந்திய திரையுலகின் மிக முக்கிய நடிகராக உலா வருபவர் மாதவன். தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர். இவரது மகன் வேதாந்த். பொதுவாக இந்தியாவில் பிரபலங்களின் வாரிசுகள் தங்களது தந்தையின் வழியிலே அவர்களது துறைகளிலே பிரபலங்களாகவே விரும்புவார்கள். அதுவும் திரைத்துறை பிரபலங்களின் பிள்ளைகள் திரைத்துறையிலே கோலோச்ச விரும்புவார்கள்.
18 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த்:
ஆனால், மாதவன் மகன் வேதாந்த் சிறந்த விளையாட்டு வீரராக உருவெடுத்துள்ளார். நீச்சல் மீது தீராத ஆர்வம் கொண்ட வேதாந்த் சிறுவயது முதலே சிறந்த நீச்சல் வீரராக மாறுவதற்கு தீவிர பயிற்சி எடுத்து வந்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.
இந்த நிலையில், 18 வயதுக்குட்பட்டோருக்கான இளைஞர்கள் காமன்வெல்த் போட்டிகள் டிரினிடாட் மற்றும் டொபோகோவில் நேற்று தொடங்கியது. பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியாவில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த தொடக்க விழாவில் வீரர்கள், வீராங்கனைகளுக்கான அணிவகுப்பு நடைபெற்றது.
View this post on Instagram
தேசிய கொடியேந்திய மாதவன் மகன்:
இதில், இந்திய அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் பங்கேற்றனர், அப்போது, இந்தியாவின் தேசிய கொடியை நடிகர் மாதவனின் மகனும், விளையாட்டு வீரருமான வேதாந்த் ஏந்தி வந்தார். சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான தொடரில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி பிரதிநிதியாக உலா வருவது ஒவ்வொரு வீரரின் கனவாகும். தனது மகனுக்கு கிடைத்த இந்த பெருமையால் மாதவன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அவர் தன் மகன் இந்திய நாட்டின் தேசிய கொடியை ஏந்திச் செல்வதை தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். வேதாந்திற்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். நேற்று தொடங்கியுள்ள இந்த 18 வயதுக்குட்பட்ட காமன்வெல்த் போட்டித் தொடரில் 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் தடகளம், பீச் வாலிபால், சைக்கிளிங், நெட்பால், ரக்பி, நீச்சல், டிரையத்லான் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்தியாவில் இருந்து வேதாந்த் மாதவன், பப்சி ஹன்ஸ்டா, அபய்சிங், ஹாசிகா ராமச்சந்திரா, பாலக் ஜோஷி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் படிக்க: ODI World Cup 2023: இந்திய மண்ணில் கோப்பை வெல்லணும்.. திட்டமிட்டு இந்தியரை இறக்கிய நியூசிலாந்து.. யார் இந்த சவுரப் வால்கர்..?